Published : 04 Dec 2019 07:17 AM
Last Updated : 04 Dec 2019 07:17 AM

11 மாணவ - மாணவியரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த  ஆசிரியை சுகந்தியின் 10-ம் ஆண்டு நினைவு நாள்: பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி

நாகப்பட்டினம் 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 மாணவ, மாணவியரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த ஆசிரியை சுகந்தியின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

வேதாரண்யம் வட்டம் நாகக்குடை யான் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன்- அன்னலட்சுமி தம்பதியரின் மகள் சுகந்தி(21). ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி காலை ஒரு வேனில் மாணவ, மாணவியருடன் சுகந்தி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.

பனையடி கொத்தகை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டுநர் இயக்கியதால் ஒரு வளைவில் இருந்த குளத்தில் வேன் கவிழ்ந்தது. அப்போது, சுகந்தி விரைந்து செயல்பட்டு நீரில் மூழ்கிய 11 மாணவ, மாணவியரை காப்பாற்றி கரைசேர்த்தார். தொடர்ந்து மற்ற குழந்தைகளைக் காப்பாற்ற சுகந்தி முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 மாணவ, மாணவியரும் உயிரிழந்தனர்.

தன் உயிரைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் செயல்பட்டு 11 மாணவ, மாணவியரின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியை சுகந்தியின் 10-ம் ஆண்டு நினைவு நாளான நேற்று நாகக் குடையான் மேலக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் சுகந்தி மற்றும் 9 மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கட்டப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் பள்ளி மாணவ, மாணவியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலு வலர்கள் சிவக்குமார், தாமோதரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவக்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் செல்லபாண்டியன், ஆசிரியர்கள் மனோகரன், அர்ச்சுனன், உயிரிழந்த மாணவர்களின் பெற் றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x