Last Updated : 03 Dec, 2019 08:57 AM

 

Published : 03 Dec 2019 08:57 AM
Last Updated : 03 Dec 2019 08:57 AM

தேர்வுக்குத் தயாரா?- ஓய்வு, உறக்கம், உணவும் மதிப்பெண் தரும்!

படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமோ அதே அளவுக்கு ஓய்வு, உறக்கம், உணவு ஆகியவற்றுக்கும் அளிக்க வேண்டும். இவற்றில் அலட்சியமாக இருப்பது உடல் நலனைப் பாதித்து, முதலுக்கே மோசம் விளைவிக்கச் செய்துவிடும்.

தேர்வு நெருக்கத்தில் மட்டுமல்ல, படிக்கிறேன் பேர்வழி என பெரும்பாலான மாணவர்கள் எப்போதும் பதற்றத்துடனே இருப்பார்கள். பள்ளியில் தேர்வு இல்லாத நாட்களிலும் பரபரப்பு காட்டுவார்கள். அவர்களில் பலர் பள்ளி முடித்ததும் வரிசையாகத் தனிப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வார்கள். தொடர்ந்து வீட்டுப்பாடம் என்ற பெயரில் பள்ளிக்கு, தனிப் பயிற்சிக்கு, அடுத்து வரும் தேர்வுக்கு என படிக்க வேண்டிய புத்தக மூட்டைக்குள் தொலைந்து போவார்கள். இதனால் நாளடைவில் அலுப்பு அதிகரித்துப் பாடத்தின் மீது கசப்புணர்வுதான் மிஞ்சும். இதன் விளைவாக மதிப்பெண்ணும் சரிந்துப் போகக்கூடும்.

உடலை வருத்தாதே!

இந்தளவுக்கு தன்னை வருத்திக் கொண்டு படிப்பதுஅவசியமில்லை. மாணவர்கள் தங்கள் இளம் வயதுக்குரிய துடிப்போடும், ஆர்வத்
தோடும் பாடங்களை தொடர்ந்து படித்தால் போதும். கடந்த வார கட்டுரையில் குறிப்பிட்டது போல உடலை வருத்தும் கடின உழைப்பை விட, ‘ஸ்மார்ட்’ ஆன சமயோசித படிப்பே புத்திசாலித்தனமானது. அதற்கு பாடங்களை புரிந்துகொண்டு, திட்டமிட்டு தொடர்ச்சியாக படிப்பது, திருப்புதல் செய்வது ஆகியவை போதுமானது. படிப்புக்கான உழைப்பால், உடலோ மனதோ பாதிக்கிறது எனில் எங்கோ தவறு நடக்கிறது என்று உஷாராக வேண்டும். எப்படியும் இன்றே, இப்போதே விடாபிடியாக செய்து முடிப்பேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ளுதல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அதிகப்படியாக வர்புறுத்திக் கொள்ளுதல் ஆகியவை வேண்டாம் மாணவர்களே.

ஓய்வு புத்துணர்ச்சி தரும்செய்யும் பணி எதுவானாலும், தொடர் உழைப்புக்கு இடையே ஓய்வு அவசியம். படிப்பது, எழுதுவது, திருப்புதல் செய்வது, பாட இணைச்செயல்பாடுகள்... என வரிசையில் அடுத்தடுத்துக் காத்திருக்கும் பணிகளுக்கு இடையே
ஓய்வுக்கு எங்கே நேரம் என்கிறீர்களா! ஓய்வு என்றால் படுக்கையில் படுத்திருப்பதோ, டிவி பார்க்கச் செல்வதோ அல்ல. பாடங்களை படிப்பதிலேயே அந்த ஓய்வை தேடி அடையலாம். கடினமான பாடங்களுக்கு இடையே எளிமையான பாடங்களைப் படிப்பது, அறிவியலில் ஒரு படத்தை வரைந்து பார்க்க முற்படுவது ஆகியவை கூட ஓய்வுக்கான உணர்வைத் தரும். அறிவியல் கூற்றுகளுக்கு மத்தியில் மொழிப் பாடமொன்றை எடுத்து வாசிப்பது நிச்சயம் புத்துணர்வூட்டும். ஆச்சரியமாக இருக்கிறதா? முயன்று பாருங்கள்!
தேர்வு நெருக்கத்தில் இல்லையென்றால் இதே சிறு ஓய்வைப் பாடத்துக்கு அப்பாலும் தேடலாம். அன்றைய தினசரியை எடுத்து கொஞ்சம் வாசிக்கலாம். நாட்டு நடப்பு, பொது அறிவு குறித்த கட்டுரைகளை வாசிக்கலாம். இந்த அனுபவம், ஓய்வாக அமைவதுடன் பாடம் சார்ந்து மொழியறிவு, பொதுஅறிவு மேம்பாட்டுக்கும் உதவும். கவனத்தைச் சிதறடிக்கும் இதர அம்சங்களில் இருந்தும் மாணவர்களைக் காக்கும். பாடங்களைத் துரிதமாக முடித்துவிட்டால் சற்று நேரம் உள்ளரங்க அல்லது வெளி விளையாட்டுகளில் நேரம் செலவிடுவதும் தப்பில்லை. உடல், மன ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும், அலுப்பை விரட்டவும் இந்த வயதினருக்கு ஓடியாடி விளையாடுவது ஒன்றே மாமருந்து.

உறக்கம் தவிர்ப்பது உதவாது

மாணவப் பருவத்தினரின் அன்றாடப் பொழுதை மூன்றாகப் பிரிக்கலாம். பள்ளியில் இருக்கும் நேரம், பள்ளிக்கு வெளியே இருக்கும் நேரம், உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம் எனத் தலா 8 மணி நேரமாக அவை அமைந்திருக்கும். மூன்றில், பள்ளியில் இருக்கும் நேரம் முதன்மையானது. பாடங்களை கவனிப்பது, குறிப்பெடுப்பது, தேர்வெழுதுவது எனப் பாடம் சார்ந்த செயல்பாடுகள் சுறுசுறுப்பாகச் சென்றாக வேண்டும். அடுத்தது, பள்ளிக்கு வெளியே இருக்கும் எட்டு மணி நேரம். இதில் வீட்டுப்பாடங்கள் செய்வது, பள்ளி-வீடு இடையிலான பயணம், பள்ளிக்குத் தயாராவது உள்ளிட்ட தினசரி கடமைகள் நீளும். மூன்றாவது எட்டு மணி நேரம் உறக்கத்துக்கானது. உண்மையில், மூன்றாவதுக்கு நாம் அளிக்கும் நேரத்தைப் பொறுத்தே மற்ற ‘எட்டு’களை பயனுள்ள வகையில் உபயோகிக்க உதவும்.

சில மாணவர்கள் படிக்கிறேன் பேர்வழியென்று ஓய்வு ஒழிச்சல் இன்றி நேரத்தைப் போக்குவார்கள். நள்ளிரவு வரை விழித்திருப்பார்கள். அதன் விளைவாய் அடுத்த நாள் வகுப்பில் தூங்கி வழிவார்கள். போதிய உறக்கம் இல்லாது போனால் உடல் உறுப்புகள் அனைத்தும் ஒத்துழையாமை இயக்கத்தில் இறங்கும். எப்போதும் சோர்வாக இருப்பது, களைப்பாக உணர்வது, பாடங்கள் ஏறாதது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என சங்கடங்கள் வரிசை கட்டும். உறக்கம் தவிர்க்கும் போக்கு தொடர்ந்து நீண்டால் அதுவே உடல்நலத்தைப் பாதிக்கும் நோயாகவும் மாறக்கூடும். எனவே குறைந்தது 6 முதல் 8 மணி நேர உறக்கம், மாணவப் பருவத்தினருக்கு அத்தியாவசியம் ஆகும். ஏதேனும் பாடச்சுமை காரணமாக ஓரிரு நாள் கண் விழிக்க நேர்வதால் பழுதில்லை. அப்பழக்கம் தொடர்வதுதான் பெரும் தொந்தரவாகும்.

எளிய உணவே நல்லது

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், பாடத்துக்கு அப்பால் பேண வேண்டியதில் ஓய்வு, உறக்கத்தைத் தொடர்ந்து முக்கியமானது உணவு நலம். நாம் உண்ணும் உணவே நமது அன்றைய தினத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாகிறது என்பதை அறிவோம். சத்துள்ள, எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகள் நல்லது. காய், கனி, பால், பருப்பு என எந்த உணவில் என்ன சத்து உள்ளது என்பதை பாடங்களில் அறிந்திருக்கிறோம். எனவே பரிமாறப்படும் உணவில் காய்களைத் தவிர்க்காது உண்பது அவசியம்.
வீட்டுக்கு வெளியே கிடைக்கும் சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது, அதிலும் தற்போதைய மழைக்காலம், ஏராளமான தொற்றும் நோய்களை வரவேற்கும் காலம். சாலையோர ஈ மொய்க்கும் தின்பண்டங்கள் மட்டுமல்ல, முடிந்தவரை உணவு விடுதிகளில் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். தேர்வு நெருக்கத்தில் இவை முக்கியம்.

தேர்வு நாட்களில் எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்து, ஆவியில் வெந்த எளிமையான உணவுகளை உண்பதே நல்லது. உடலுக்குச் சத்து, நினைவாற்றலுக்கு நல்லது என சந்தையில் கிடைக்கும் ஏதேனும் சத்துணவு அல்லது பானங்களை சுயமாக உண்பதும் உகந்ததல்ல. ஒருசிலர் நினைவாற்றலுக்கு என மாத்திரை மற்றும் மருந்துகளையும் உண்ணும் யோசனையில் இருப்பார்கள். உரிய மருத்துவ ஆலோசனை இன்றி இவற்றை பயன்படுத்துவதால் மோசமான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும்.

சத்தாக சாப்பிடுகிறேன் பேர்வழியென்று மூச்சு முட்டச் சாப்பிடுவதும் தொந்தரவாகும். உணவில் ஒவ்வாமை இருப்பின் அவற்றைத் தவிர்ப்பதும் அவசியம். சுருங்கச் சொல்வதெனில், பாடங்களுக்கு எப்படி ஆசிரியரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறோமா, அதுபோல உடல் ஆரோக்கியம் மற்றும் சத்தான ஆகாரத்துக்கு பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் போதுமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x