

ஆவுடையப்பன்
புதுச்சேரியில் பல்லுயிர் பாதுகாப்பை வலியுறுத்தி கைவினை கிராமத்தில் சிற்பிகள் சிலைகளை வடிவமைத்து வருகின்றனர். இதில் புலி சிலையை பலரும் ஆர்வத்தோடு ரூ. 2.5 லட்சத்துக்கும் வாங்க தயாராக உள்ளனர்.
புதுச்சேரி நைனார் மண்டபத்தில் அமைந்துள்ளது கலை மற்றும் கைவினை கிராமம். இங்கு கைவினைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
புதுச்சேரி அரசும் சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் இணைந்து, அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், மிருகங்கள், பூச்சிகள் போன்றவற்றை சிற்பமாக செய்து பல்லுயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது போன்ற சிற்பங்கள் தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் பூபேஷ் குப்தா கூறுகையில், ‘‘புதுச்சேரியில் சிற்பிகளின் கை வண்ணத்தில் உருவாகும் மிருகங்கள், பறவைகளின் சிலைகள் திருப்பதி மற்றும் சேலத்தில் உள்ள பூங்காக்கள், வண்டலூர் மிருகக்காட்சி சாலை உள்ளிட்ட சில சரணாலயங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் இயற்கை சூழலுடன் வைக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சிற்பி மூர்த்தி கூறுகையில், ‘‘கைவினை கிராமத்தில் உருவாக்கப்பட்ட மயில் சிற்பம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது உருவாக்கப்படும் புலி சிற்பத்தை பலரும் விரும்பி விலை கேட்டு வருகின்றனர். இதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை விலை பேசப்பட்டு வருகிறது. பல்லுயிர் பாதுகாப்புக்காக சிற்பங்கள் செய்வது மகிழ்ச்சி தருகிறது. எங்களின் திறமையை வெளிப்படுத்துவதுடன் வருமானத்திற்கும் அரசு வழிவகை செய்கிறது’’ என்று குறிப்பிட்டனர்.
சிற்பிகள் தரப்பில் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் உள்ள பூங்காக்களில் பல்லுயிர் பாதுகாப்பு சிற்பங்களை இயற்கையோடு வைத்தால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சிற்பக்கலையும் பாதுகாக்கப்படும்’’ என்கின்றனர்.