Last Updated : 02 Dec, 2019 04:10 PM

 

Published : 02 Dec 2019 04:10 PM
Last Updated : 02 Dec 2019 04:10 PM

ஓய்வு பெற்ற பிறகும் கல்விக்கு ரூ.97 லட்சம் நன்கொடை: நெகிழ வைக்கும் பேராசிரியை!

கொல்கத்தா

கொல்கத்தாவைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க பேராசிரியர், தான் ஓய்வு பெற்ற பிறகும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.97 லட்சம் நன்கொடை வழங்கி நெகிழ வைத்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் பஹுயாட்டி பகுதியில் உள்ள ஃபிளாட் ஒன்றில், சித்ரலேகா மாலிக் என்னும் ஓய்வுபெற்ற பேராசிரியர் தனியாக வசித்து வருகிறார். அவர் கூறும்போது, ''2002-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கல்வி நிறுவனங்களுக்கு சுமார் ரூ.97 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறேன்.

பண உதவி தேவைப்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் உதவ ஆசைப்படுகிறேன். நான் படித்த ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஆண்டு ரூ.50 லட்சம் வழங்கினேன். என்னுடைய ஆய்வுப் பேராசிரியர் பண்டிட் பிதுபூஷண் பட்டாச்சார்யா நினைவாக இதை வழங்கினேன். அவரின் மனைவி ஹேமாவதி பட்டாச்சார்யா நினைவாகவும் ரூ.6 லட்சம் தொகையை அளித்துள்ளேன்.

2002-ம் ஆண்டு விக்டோரியா கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரத்தை வழங்கினேன்'' என்கிறார் பேராசிரியர் சித்ரலேகா. தன்னுடைய பெற்றோரின் நினைவாக ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ரூ.31 லட்சத்தை வழங்கியுள்ளதாகக் கூறும் அவர், எப்படி இவ்வளவு தொகையை நன்கொடையாக அளிக்க முடிகிறது? என்பது குறித்தும் பேசுகிறார்.

''ஆடம்பரப் பொருட்களையும் அதிக வசதிகளையும் தவிர்க்கும்படி உபநிடதங்கள் கற்பித்திருக்கின்றன. அதைப் பின்பற்றி எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என்னுடைய தினசரித் தேவைகளுக்கு அதிகம் செலவாவதில்லை. அதனால் என்னால் கூடுதலாகச் சேமிக்க முடிகிறது.

மாதாமாதம் வரும் 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தைக் கொண்டே கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குகிறேன்'' என்று ஆச்சரியப்படுத்துகிறார் சித்ரலேகா மாலிக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x