Last Updated : 02 Dec, 2019 02:59 PM

 

Published : 02 Dec 2019 02:59 PM
Last Updated : 02 Dec 2019 02:59 PM

மாநில அரசு கட்டுப்பாட்டில் பள்ளிகள் இருப்பதால்  நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் சாத்தியமல்ல: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விளக்கம்

நான்காண்டுகள் தயாரிப்புக்குப் பிறகு தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை உள்வாங்கி கஸ்தூரி ரங்கன் கமிட்டி வடிவமைத்த திட்டம் இது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் முதியோர் கல்வி, தேசியக் கல்வி கமிஷன் குறித்து விவரிக்கும் ‘கல்வியை உருமாற்றும் திட்டம்’ என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 484 பக்கங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை விரிவாக எழுதப்பட்டது.

பொது மக்களின் கருத்துக்கேட்புக்காக இந்த வரைவு முன்வைக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இருந்து புதிய கல்விக் கொள்கை குறித்து பல லட்சம் கருத்துகள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புதிய கல்விக் கொள்கையில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற முன்மொழிவு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்
கப்பட்டது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவம் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பது சாத்தியப்படாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று தெரிவித்தார்.

இது குறித்து மக்களவையில் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ”தேசிய பாடத்திட்ட தயாரிப்பு என்ற அறிக்கையை என்.சி.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் உருவாக்கியது. இதில் அனைத்து பள்ளி வகுப்புகளுக்கான பாடத்திட்டம், பாடப்புத்தகம் உள்ளிட்டவை எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பது குறித்த வழிமுறை, வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருந்தது” என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படிகல்வி என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. அதே போல நாட்டில் செயல்பட்டுவரும் பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆகையால் பள்ளிப் பாடத்திட்டத்தை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொறுப்பும் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குத்தான் உள்ளது என்றார். ஒட்டுமொத்த நாட்டுக்கான ஒற்றை பாடத்திட்டம் என்பது சாத்தியப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“என்சிஇஆர்டி.யின் கல்வி மாதிரியையும் பாடப்புத்தகங்களையும் பின்பற்றுவதா அல்லது தேசிய பாடத்திட்ட வடிவமைப்பை தழுவி தங்களுக்கான பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகங்களையும் வடிவமைப்பதா என்பதையெல்லாம் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகங்களும் மாநில கல்வி வாரியங்களும்தான் முடிவு செய்ய வேண்டும். தங்களுடைய மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப இவற்றை அவர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்” என்று கேள்வி-பதில் நேரத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டமும் இந்திய விடுதலை போராட்டமும்தான் தேசியபாடத்திட்ட தயாரிப்பின் முக்கியஅம்சங்கள் என்றார் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். “இந்தியாவின் பாரம்பரியத்தையும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், மதச்சார்பின்
மையையும், பாலின சமத்துவத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், சமூக தடைகளை நீக்கத் தேவையான அறிவியல் ரீதியான அணுகுமுறையையும் கற்பித்து, ஊக்குவிக்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x