

வத்தலகுண்டு அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை உட்பட பல்வேறு பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கணவாய்ப்பட்டி ஆசிரமம் காலனியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்படுகிறது. இங்கு இருபதுக்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். முதியோர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை மாணவர்கள் அறியும் வகையில் கணவாய்ப்பட்டியில் உள்ள ‘பஸ்ட் ஸ்டெப்’ பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் முதியோர் இல்லத்
துக்கு அழைத்துச் சென்றனர்.
முதியவர்களுக்காக மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து வேட்டிகள், சேலைகள், நைட்டி, பெட்ஷீட் ஆகியவற்றை எடுத்து வந்தனர். சிலர் சோப்பு, பிஸ்கெட்கள் கொண்டு வந்தனர்.
பள்ளி முதல்வர் கயல்விழி தலைமையில் முதியோர் இல்லம் சென்ற மாணவ, மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை முதியோர்களிடம் வழங்கி ஆசி பெற்றனர்.
இயன்ற உதவி
மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘‘வீடுகளில் உள்ள எங்கள் தாத்தா, பாட்டிகள் போல்தான் இவர்களும். எனவே இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் எங்களால் இயன்ற பொருட்களைக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் முதியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள முதியோர்களையும் நாங்கள் நல்ல முறையில் பார்த்துக் கொள்வோம்’’ என்றனர்.
மாணவ, மாணவிகளிடம் பொருட்களை வாங்கிக் கொண்டமுதியோர்கள் மகிழ்ச்சியடைந்து அவர்களை மனதார ஆசிர்வதித்தனர். பள்ளி மாணவர்கள் செய்த இந்தச் செயல் நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது.