

வத்தலகுண்டு அருகேயுள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியோர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டுவந்த பல்வேறு பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்வித்தனர் பள்ளிக் குழந்தைகள்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள கணவாய்ப்பட்டி ஆசிரமம் காலனியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு இருபதுக்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
முதியோர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும் என்பதை மாணவர்கள் அறியும் வகையில் கணவாய்ப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முதியோர் இல்லம் சென்று அவர்களை சந்திக்க முன்னதாகவே முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அவரவர் வீட்டில் இருந்து முடிந்த பொருட்களை கொண்டுவர கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என தங்களின் உறவுகள் பயன்படுத்தி நல்லநிலையில் உள்ள வேட்டிகள், சேலைகள், நைட்டி, பெட்ஷீட் ஆகியவற்றை எடுத்துவந்தனர்.
சிலர் சோப்பு, பிஸ்கட்கள் ஆகியவற்றை கொண்டுவந்தனர். சிலர் புதிதாக கைலி, வேட்டிகள் உள்ளிட்ட துணிகளை தங்கள் பெற்றோரிடம் வாங்கிவந்தனர். பள்ளி முதல்வர் கயல்விழி தலைமையில் முதியோர் இல்லம் சென்ற மாணவ, மாணவிகள் அவரவர் கொண்டுவந்த பொருட்களை முதியோர்களிடம் வழங்கி ஆசிபெற்றனர்.
மாணவ, மாணவிகள் கூறுகையில், வீடுகளில் உள்ள எங்கள் தாத்தா, பாட்டிகள் போல் தான் இவர்களும் எனவே இவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் எங்களால் இயன்ற பொருட்களை கொடுத்துள்ளோம்.
இதன்மூலம் முதியோர்களை காக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள முதியோர்களையும் நாங்கள் நல்லமுறையில் பார்த்துக்கொள்வோம், என்றனர். மாணவ, மாணவிகளிடம் பொருட்களை வாங்கிக்கொண்ட முதியோர்கள் மகிழ்ச்சியடைந்து அவர்களை வாழ்த்தினர்.
தொடர்ந்து வத்தலகுண்டு ரோட்டரி சங்க தலைவர்
கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ரோட்டரி சங்க பொருளாளர் கார்த்தி, ரோட்டரி சங்க நிர்வாகி சதீஷ்குமார் ஆகியோர் முதியோர் இல்லத்திற்கு ஹீட்டர், சோலார் லைட்களை வழங்கினர்.