Last Updated : 30 Nov, 2019 02:33 PM

 

Published : 30 Nov 2019 02:33 PM
Last Updated : 30 Nov 2019 02:33 PM

அறிவியல் உருவாக்குவோம் போட்டி: பிரான்ஸுக்குச் சென்ற 30 புதுச்சேரி அரசுப்பள்ளி ஆய்வறிக்கைகள்

அறிவியல் உருவாக்குவோம் 2020 என்ற ஆய்வுத்திட்ட போட்டிக்கு அரசுப் பள்ளிகளிடமிருந்து 30 ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதுவை அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரீஸ் பல்கலைக்கழகத்துடன் (The University of Paris, South 11) இணைந்து அறிவியல் உருவாக்குவோம் போட்டிகளை( Make Science Competitions) நடத்திவருகிறது.

இதற்காக புதுவை பள்ளிக்கல்வித் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணைந்து 14-வது அறிவியல் உருவாக்குவோம் திட்டத்துக்காக 2020-ம் ஆண்டுக்கான அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் கோரப்பட்டன.

இப்போட்டியில் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கு பெற்றனர். ஆய்வுத்திட்டத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வானியல், நிலவியல் ஆகிய பிரிவுகளில் 30 ஆய்வு அறிக்கைகளை தயாரித்தனர். இவை தற்போது பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக புதுச்சேரி அறிவியல் இயக்க பொதுச்செயலர் ரவிச்சந்திரன் கூறுகையில், "அரசுப் பள்ளிகளில் இருந்து ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மின்னஞ்சல் மூலம் 30 ஆய்வறிக்கைகளை பிரான்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளோம். அவற்றில் சிறந்த 12 ஆய்வுத் திட்டங்கள் டிசம்பர் மாத இறுதியில் தேர்வு செய்யப்படும். அத்திட்டங்களுக்கு பிரான்ஸ் அரசு சார்பில், தலா 50 யூரோக்கள் ஊக்கத் தொகை தரப்படும்.

பிறகு அத்திட்டம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு மீண்டும் பிரான்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படும். இதில் சிறந்த 4 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக 300 யூரோக்களும், மூன்று இரண்டாம் பரிசுக்கு தலா 100 யூரோக்களும் அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x