Last Updated : 29 Nov, 2019 04:59 PM

 

Published : 29 Nov 2019 04:59 PM
Last Updated : 29 Nov 2019 04:59 PM

சிவகங்கை அருகே 20 கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை: மாதம் ரூ.200 செலுத்தி வேனில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

சிவகங்கை அருகே 20 கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் ஒவ்வொரு மாணவரும் மாதம் ரூ.200 செலுத்தி வேனில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

சிவகங்கை அருகே சாக்கூர் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் இலந்தக்கரை, பாண்டிமாரந்தை, தோண்டியூர், கோடிக்கரை, குடியாண்டவயல், கிராம்புளி, விளாங்காட்டூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆனால் அக்கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

இதையடுத்து பள்ளி சார்பில் வேன் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. வேனுக்கான செலவுத் தொகையில் பாதியை ஆசிரியர்கள் கொடுக்கின்றனர். மீதித்தொகைக்கு ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மாதந்தோறும் ரூ.200 வசூலிக்கின்றனர்.

அப்பகுதியில் விவசாயிகளும், கூலித்தொழிலாளர்கள் மட்டுமே வசிப்பதால் அந்த தொகையை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதனால் சிலர் பாதியில் படிப்பைக் கைவிடும்நிலை உள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் அரசு பேருந்து இயக்க வேண்டுமென கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோடிக்கரை கிராம மக்கள், "தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட வசதி இல்லாததால் தான் எங்கள் குழந்தைகளை அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்க வைக்கிறோம்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிறைவாகக் கிடைத்தாலும் பேருந்து வசதி இல்லாததால் மாதந்தோறும் வேனுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. இலவச பயண அட்டை திட்டம் இருந்தும் எங்கள் பகுதி மாணவர்களுக்கு பயனில்லை. காரணம் பேருந்து வசதி இல்லை.

காளையார்கோவில் மற்றும் இளையான்குடியில் இருந்து எங்கள் பகுதிக்கு பள்ளி நேரத்தில் பேருந்துகளை இயக்கினால் மாணவர்கள் பயனடைவர்.

அதேபோல் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கும் மாணவர்கள் மறவமங்கலம், சூரணம் செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதிகளுக்கும் செல்ல பேருந்து வசதி இல்லாததால் பலர் மேல்நிலைக் கல்வியை படிக்க முடியாமல் கைவிடுகின்றனர்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x