

கோவா பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமூக நல்லிணக்கப் பாடங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதுதொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வந்தனா ராய் கூறும்போது, ''மாணவர்களிடையே சமூக நல்லிணக்கப் பாடங்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. குடிமகனின் அடிப்படைக் கடமையான சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மாணவர்களிடையே மத, மொழி, பிராந்திய அல்லது ஒவ்வொரு பிரிவுக்குமான வேற்றுமைகளை மறந்து சமூக நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அத்துடன் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும்.
'மார்க் சுரக்ஷா' என்னும் மானிய உதவித் தொகைத் திட்டம் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் பாடங்களில் சமூக நல்லிணக்கம், சாலைப் பாதுகாப்பு ஆகியவை சேர்க்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாணவர்களிடையே உடல் வறட்சியை ஏற்படுத்தும் தாகத்தைத் தடுக்கும் விதமாக தினந்தோறும் இரண்டு முறை குடிநீர் இடைவேளை விடப்பட வேண்டும் என்று கோவா அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக கோவா பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் ஷைலேஷ் ஜிங்டே அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.