Published : 29 Nov 2019 03:16 PM
Last Updated : 29 Nov 2019 03:16 PM

அன்பாசிரியர் 46: ஹபீபா- கிராமமே சேர்ந்து கோயிலில் மரியாதை செய்த ஆசிரியை!

கல்வி- உலகத்தையே மாற்றி அமைக்கும் மாபெரும் ஆயுதம்!

அழகிய கையெழுத்தில் கிராம மக்களுக்குக் கடிதங்கள் எழுதி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது, கதை வழிக் கற்பித்தல், குழந்தையாகவே மாறி மாணவர்களோடு விளையாடுவது. கிராம பெண்கல்வி ஊக்குவிப்பாளர் என்று சுற்றிச் சுழல்கிறார் அன்பாசிரியர் ஹபீபா.

சேலத்தில் 2 சகோதரிகள், 1 சகோதரர் என பெரிய குடும்பத்தில், சிரம சூழலில் வளர்ந்தவர் அன்பாசிரியர் ஹபீபா. அப்பா சைக்கிள் கடை மெக்கானிக். 'பள்ளிக்கே செல்லாத தாயின் ஆசையால், ஆசிரியர் ஆனேன்' என்கிறார் ஹபீபா. அவர் பேசும்போது, ''அக்கா என்னைவிட நன்றாகப் படிப்பார். ஆனாலும் இஸ்லாமியக் குடும்பம் என்பதால் அவருக்கு 17 வயதிலேயே திருமணமானது. ஆனால் என்னை உறுதியுடன் படிக்க வைத்தார் அம்மா.

ஆசிரியர் பயிற்சியை முடித்த எனக்கு 1997-ல் திருவண்ணாமலை மாவட்டம், வேடியப்பனூரில் இடைநிலை ஆசிரியராகப் பணி கிடைத்தது. பள்ளியின் முதல் பெண் ஆசிரியராக வேலையில் இணைந்தேன். பசும் வெளிகளோடு இருக்கும் கிராமத்தில் பணியாற்ற ஆசைப்பட்ட எனக்கு பொட்டல் காடாய், வளர்ச்சி இல்லாமல் இருந்த வேடியப்பனூரைப் பார்க்க மனம் வேதனைப்பட்டது.

எனினும் மனம் தளராமல் பணியாற்ற முடிவெடுத்தேன். முதல் 12 ஆண்டுகள், 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பாடங்கள் எடுத்தேன். பாட்டுப் பாடுவது, ஓடியாடுவது, குதித்து ஓடுவது என குழந்தையாகவே மாறி அவர்களுக்குக் கற்பிப்பேன். மாணவர்களை மடியில் உட்கார வைத்துப் பேசுவேன். மணி, கற்களை வைத்து கணித வகுப்புகளை எடுப்பேன். பாட்டுப் பாடியும் எண்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது வழக்கம். கலர் சாக்பீஸ்கள், சார்ட்டுகள், படங்கள் என வகுப்புகள் குதூகலமாகக் கழிந்தன.

தினந்தோறும் கடைசிப் பாடவேளையில் மாணவர்களைச் சொந்தமாகக் கதை சொல்லச் சொல்வேன். அவர்களைப் பாடச் சொல்வது, உடன் விளையாடுவது என கலகலப்பாய் பள்ளி முடியும். 'அடுத்த நாளும் வெளையாடணும் டீச்சர்' என்று ஆர்வத்துடன் கூறி, மாணவர்கள் வீட்டுக்குச் செல்வர். குழந்தைகளுக்கு அடிப்படை ஒழுக்கம், சுகாதாரத்தைக் கற்றுக்கொடுத்தோம். எப்படி உட்கார வேண்டும், சாப்பிட வேண்டும், பள்ளிக்கு வருவது எப்படி என்பது குறித்து விளக்கினோம். பள்ளியில் மாணவர்கள் தெரியாமல் கீழே விழுந்து அடிபட்டால், பெற்றோரை எதிர்பார்க்காமல் நாங்களே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம்.

பெண் கல்விக்கு முக்கியத்துவம்
அருகில் இருந்த தொண்டு நிறுவனங்களிடம் பேசி, கம்பி வேலி, சுற்றுச்சுவர், போர்வெல், மோட்டார், மேசை, நாற்காலி, கழிப்பறைகளை உருவாக்கினோம். அப்போதெல்லாம் பெண்களை அதிகம் பள்ளிக்கு அனுப்பாத சூழல் இருந்தது. கிராம மக்களை அழைத்துப் பேசினோம். மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆதரவளித்தனர். பெண் கல்வி, மாணவர் பாதுகாப்பு, அவர்களின் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பெற்றோர் ஆசைப்படுவது தெரிந்து மாணவர்களுக்கு ஷூ, ஐடி கார்டு, டை ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினோம். இதனால் அருகில் இருந்த தனியார் பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு சேர்ந்தனர்.

தலைமை ஆசிரியரும் பள்ளி செயல்பாடுகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கினார். நாட்கள் செல்லச்செல்ல சேர்க்கை அதிகரித்தது. தொடக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் முதல் தொகையாக ரூ.500 வழங்கினார். மற்ற ஆசிரியர்களும் கொடுத்தோம். கிராமத்துக்குச் சொந்தமான இடத்தை மக்களே முன்வந்து வழங்கினர். தொடக்கப்பள்ளிக்கு அருகிலேயே கோயிலுக்குச் சொந்தமான 85 சென்ட்டில் நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது.

பெற்றோருக்குக் கடிதம்
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கிராமம் முழுவதும் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்போம். 5 வயது நிரம்பிய குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்குக் கடிதம் எழுதுவேன். 'வரும் ஜூன் மாதத்தில் உங்கள் குழந்தையைக் கட்டாயம் பள்ளியில் சேர்க்கவேண்டும்' என்று எழுதி, உடன் சாக்லேட் அல்லது பரிசுப்பொருளை வைத்துத் தந்துவிடுவோம். அரசாங்க உத்தரவு என்று மக்களும் யோசிக்காமல் பள்ளியில் சேர்த்தனர்.

மறக்க முடியாத சம்பவம்
தொடக்கப் பள்ளியில் என்னிடம் படித்த மாணவர்கள் சிலர், அருகில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தனர். ஒருமுறை மதிய உணவு இடைவேளையில் ஆசிரியர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு வந்த மாணவர்கள், என்னை நடுநிலைப் பள்ளிக்கு அழைத்தனர். யோசனையோடு சென்று, உள்ளே கால் வைத்ததும் ஆனந்தக் குரல்கள் எழுந்தன.

கிராமத்தில் உள்ள அனைத்துப் பூக்களையும் பறித்து குடைக்குள்ளே வைத்து, நான் வரும்போது விரித்தனர். பூ மழை பொழிந்தது. வாழை இலையை வைத்து அவர்களுக்குத் தெரிந்த வகையில் பூங்கொத்தை உருவாக்கிக் கொடுத்தனர். கடலை பர்பி, மைசூர்பா, ஆரஞ்சு மிட்டாய் என இனிப்புகளை நீட்டி, பாடிக்கொண்டே பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். அப்போதுதான் பிறந்தநாள் நினைவு வந்தது. என்றோ பேசும்போது கூறியதை வைத்து, பிஞ்சுகள் கொண்டாடிய அந்த நாளை என்றும் மறக்க முடியாது. அதைத்தான் என்னுடைய ஆகச்சிறந்த விருதாக நினைக்கிறேன்.

வேடியப்பனூரில் 17 ஆண்டுகள் வேலை பார்த்தபிறகு பணியிட மாறுதல் கிடைத்தது. அதை கிராமத்தினரிடம் சொன்னேன். வீடுதேடி வந்த 20 பேர், 'போகக்கூடாது டீச்சர்' என்று கேட்டுக்கொண்டனர். இரவாகிவிட்டதால் சாப்பிடச் சொன்னேன். 'ஸ்கூலை விட்டுப்போக மாட்டேன்னு சொல்றவரை கைநனைக்க மாட்டோம்' என்று உறுதியாகக் கூறிவிட்டனர். யோசித்து, போகவில்லை என உறுதியளித்தபிறகே கிளம்பிச் சென்றனர்.

கோயிலில் மரியாதை
2016-ல் தலைமை ஆசிரியராக, பதவி உயர்வுடன் கூடிய இட மாறுதல் கிடைத்தது. பதவி உயர்வு என்பதால், வேறு வழியில்லாமல் அனுப்பினர். அப்போதும் பட்டுப்புடவை, பழம், இனிப்பு உள்ளிட்டவைகளை வைத்துக் கொடுத்தனர். கோயிலில் மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். தற்போது பெரியகள்ளாப்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். மக்கள் தொகை குறைவாக இருப்பதால், சேர்க்கையும் குறைவாகவே உள்ளது. பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்துவருகிறோம். அவர்களின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று பேசுகிறோம்.

பெண்ணாக இருந்ததால் நான் படிக்க, என் தாய் பட்ட துயரத்தை உணர்ந்திருக்கிறேன். அதனால் கிராமங்களில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அப்போதெல்லாம் 8-ம் வகுப்பை முடித்த உடன் சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைத்து விடுவர். வேடியப்பனூரில் ஆரம்பக் கல்வியை என்னிடம் முடித்த சசிகலா என்னும் மாணவி மிகுந்த சிரமத்துக்கு இடையில் பள்ளிப்படிப்பை முடித்தார். தினந்தோறும் 15 கி.மீ. சைக்கிளில் சென்று கல்லூரியையும் முடித்தார். அவருக்குத் தற்போது காவல்துறையில் வேலை கிடைத்துள்ளது. அண்மையில் அவர் வீட்டுக்கே வந்து என்னிடம் ஆசிபெற்றார். அப்போது எனது வேலைக்கான திருப்தியை ஆத்மார்த்தமாக உணர்ந்தேன்.

தற்போதைய பள்ளிக்கட்டிடம் பழமையானது. 1957-ம் ஆண்டு வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், தற்காலிகமாக கிராம நூலகத்தில் பள்ளியை நடத்தி வருகிறோம். அரசு சார்பில் கட்டிடம் உருவான பிறகே அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் உருவாக்க வேண்டும்.

அப்போதெல்லாம் எங்கள் சமூகத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். அதையும் மீறி நான் ஓர் ஆசிரியை ஆனது சாதனை. இதற்கு என் அம்மாதான் முதுகெலும்பாக இருந்தார். அதேபோல பல கிராமத்துச் சிறுமிகளின் அம்மாவாக இருந்தது அவர்களைப் படிக்கவைப்பதே எனது ஆசை'' என்கிறார் அன்பாசிரியர் ஹபீபா.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 45: கருப்பையன்- 15 ஆண்டுக்கு முன்னாலேயே காலை உணவு, கல்விச்சீர், ஸ்மார்ட் வகுப்புகள்: தமிழகத்தின் முன்னோடி ஆசிரியர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x