இந்திய பழைய சேலைகளால் வறுமையை விரட்டும் தென் ஆப்பிரிக்க பெண்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தலைப்பை பார்த்து அதிசயமாக இருக்கிறதா மாணவர்களே... பழைய சேலைகளால் நிச்சயம் வறுமையை போக்குவது மட்டுமில்லை, பெண்களுக்கான வேலை வாய்ப்பையும் உருவாக்கி வருகிறார் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் இருக்கும் 5 பெண் குழந்தைகளின் தாயான ராயனா எட்வர்ட்ஸ்.

வேலைவாய்ப்பு திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நாட்டில் பசியும் சேர்ந்தேதான் ஆடும். அப்படியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ராயனா எட்வர்ட்ஸ், தனது 5 பெண் குழந்தைகளை வளர்க்க வேலைத்தேடி அலைந்து அலுத்து போனார். அப்போது தோன்றியதுதான் சேலை ஐடியா. பழைய சேலைகளை வாங்கி, அதை பேஷன் உடைகளாக மாற்றுவதில் ராயனா எட்வர்ட்ஸுக்கு இணை, அவரே என்று சொல்லலாம்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஆதாரமாக கொண்டு, தன்னால் முடிந்த அளவுக்கு ஆப்பிரிக்க மக்களுக்கு உதவி வருகிறார். இதுகுறித்து ராயனா எட்வர்ட்ஸ் கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவில் வறுமையில் இருக்கும் மக்களுக்கு ஒருவேளை உணவு கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். அப்போதுதான், சேலை எனக்கு கைகொடுத்தது” என்கிறார்.

எவ்வளவு உடை இருந்தபோதிலும் சேலையை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது, “இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற ஆசிய துணை கண்டத்தில் பெண்கள் அதிகமாக சேலைதான் கட்டுகிறார்கள். இந்திய பெண்கள் தங்களின் தேவைக்கு அதிக மாக வாங்கும் சேலைகள் கிழிந்தாலோ அல்லது வண்ணம் மாறினாலோ அதை வீசி விடுகிறார்கள்.

அதுபோக ஒரு சேலை 4 முதல் 8 மீட்டர் நீளம் உள்ளது. இதனால் இதை சுலபமாக பேஷன் உடைகளாக தைத்துவிடலாம். எனது நிறுவனத்தில் பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதன்மூலம், தங்களுக்கு தேவையான நிதியை அவர்களே சம்பாதிக்கிறார்கள்” என்றார்.

இதற்காக ராயனா ‘ சாரி ஃபார் சேன்ஞ் (மாற்றத்திற்கான புடவை)’ என்ற அமைப்பை 2014-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். பெண்கள் பயன்படுத்திய சேலைகளை விலைக்கு வாங்கி, அதை நன்கு சுத்தம் செய்து, அவை பேஷன் உடைகளாக மாற்றப்படுகிறது. இதற்காக பெரிய குழு செயல்படுகிறது.

ராயானாவின் பேஷன் உடைகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாற்றத்திற்கான புடவை நிகழ்ச்சியை ஜோகன்னஸ்பர்க் நகரில் நடத்தினார். சேலைகள் மூலம் பெண்களுக்கு பேஷன் உடைகள் தைத்த இந்த நிறுவனம் இனி ஆண்களுக்கும் உடை தைக்க உள்ளது.

இதைபோல், உலகில் பல பகுதியில் மாற்றத்திற்கான புடவை நிகழ்ச்சியை அவர் நடத்தவுள்ளார். நம்ம அம்மாக்கள் கட்டும் சேலைகளை அவர் எவ்வாறு மாற்றியுள்ளார் என்பதை www.sariforchange.com இணையதளத்தில் சென்று ஒரு முறை பாருங்கள்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in