Published : 28 Nov 2019 12:17 PM
Last Updated : 28 Nov 2019 12:17 PM

மாணவர்களின் உடல் தகுதியை மேம்படுத்த பள்ளிகளில் தினமும் உடற்பயிற்சி: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

மாணவர்களின் உடல் தகுதியை மேம்படுத்த, காலை வழிபாட்டுக்கு முன் 15 நிமிடம், மாலை 45 நிமிடம் உடற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பாடத்திட்ட கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது குறைந்து வருவதாகவும், பெற்றோரே பிள்ளைகள் விளையாடுவதை விரும்புவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையை மாற்ற பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உடற்கல்வி தொடர்பான சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த சுற்றறிக்கையை, ‘சமக்ர சிக் ஷா’ மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் வாசித்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு இருபாடவேளைகள் மட்டுமே உடற் கல்விக்காக ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், மாணவ, மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல் சார்ந்த பயிற்சிகள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பாடச்சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைந்து கற்றல் திறன் மேம்படும்.

இதன்மூலம் பள்ளிகள், மாவட்டம், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உடல் தகுதி மற்றும் ஆர்வம் ஏற்படும். அதனால், ஒவ்வொரு பள்ளியிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்துக்கு முன் 15 நிமிடங்களும், மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால், மாணவர்களின் உடற்தகுதி மேம்படும். இதனை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

உடல் சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, யோகா, நடனம் இடம்பெற வேண்டும். அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை முழுநேர உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு இதைச் செயல்படுத்தலாம். அவ்வாறு இல்லாத பள்ளிகளில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை பயன்படுத்தலாம். உடல் சார்ந்த பயிற்சிகளில் இசை ஆசிரியர், உடற்கல்வி திறன் பெற்ற ஆர்வமுள்ள இதர கல்வி ஆசிரியர்களின் உடற்கல்வி பயிற்றுவிக்கும் திறனையும் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x