Last Updated : 27 Nov, 2019 12:02 PM

 

Published : 27 Nov 2019 12:02 PM
Last Updated : 27 Nov 2019 12:02 PM

1968-ல் பொறியியல் பயின்ற 600 பேரில் ஒரே மாணவி நான்தான்: இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி சுவாரஸ்யம்

மும்பை

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திக்கு பெரிதாக அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. ஆனால், அவரின் கல்விப் பயணம் குறித்து அவர் அளித்துள்ள அறிமுகம் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

பாலிவுட் பிரபலம் ஏற்று நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் சீசன் 11-ல் சிறப்பு விருந்தினராக சுதா மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவரின் பாதம் தொட்டு வணங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அமிதாப் பச்சன்.

சுதா மூர்த்தி, கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என அமிதாப் பச்சன் அறிமுகப்படுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட சுதா மூர்த்தி அந்தக்காலத்தில் பெண்கள் பொறியியல் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை விவரித்தார்.

"1968-ல் நான் எதிர்காலத்தில் பொறியியல்தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் தந்தையோ மருத்துவர், பேராசிரியராகவும் இருந்தார். தாய் கணித ஆசிரியை. எனக்கு அப்ளைட் சயின்ஸ் மீதே ஆர்வம் இருந்தது. அதனால், பொறியியல்தான் படித்தாக வேண்டும் என்று தீர்மானித்தேன். என் முடிவைக் கேட்டு பாட்டி அதிர்ந்துபோனார். நீ பொறியியல் பயின்றால் எப்படி அதற்கு நிகராக மணமகன் தேடுவது என்றார். எனது தந்தை நான் மருத்துவம் பயின்றால் நன்றாக இருக்கும் என்றார்.

அம்மாவோ என்னை எப்படியாவது கணிதப் பேராசிரியர் ஆக்கிவிட விரும்பினார். பேராசிரியர் என்றால் தொழிலையும் வீட்டையும் கவனிக்க சரியாக இருக்கும் என சிபாரிசுகூட செய்தார். என் எதிர்காலத்தின் மீது எல்லோருக்குமே ஒரு பார்வை இருந்தது. சிலர் பெண் ஒருத்தி தனது பொறியியல் படிப்பைத் தேர்வு செய்வதா? இது ஆண்பிள்ளைகளுக்கான துறை அல்லவா என்று நகைத்தனர். இன்னும் சிலர் இதை அனுமதிக்கக் கூடாது என்றனர். ஆனால் நான் மன உறுதியுடன் இருந்தேன்.

நான் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த கல்லூரியில் 600 இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த ஆண்டு 599 மாணவர்கள், நான் ஒரே ஒரு மாணவி என்று காலியிடங்கள் நிரப்பப்பட்டன. என் மதிப்பெண் அடிப்படையில் எனக்கு இடம் கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் கல்லூரி முதல்வர் எனக்கு சீட் வழங்கியிருந்தார்.

ஆனால் அந்த அனுமதிக்குப் பின்னால் சில கெடுபிடிகள் இருந்தன. நான் சேலை மட்டுமே அணிய வேண்டும். கல்லூரி கேன்டீனுக்கு செல்லக்கூடாது. முதல் இரண்டு கெடுபிடிகள் எனக்கு எந்த நெருடலையும் தரவில்லை. காரணம் எனக்கு சேலை பிடித்திருந்தது, கேண்டீன் உணவு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் மூன்றாவது விதியை நான் மீறவில்லை. தேர்வுகளில் நான் முதலிடம் பெற்று ரேங்க் ஹோல்டர் ஆனதால் மாணவர்கள் அவர்களாகவே என்னிடம் வந்து பேசினர் (சிரிக்கிறார்).

எனக்கு ஒரே ஒரு கஷ்டம்தான் கல்லூரி காலத்தில் இருந்தது. கல்லூரியில் பெண்களுக்கு என்று தனியாக கழிவறை இல்லை. இதை சர்ச்சையாக்கினால் ஒருவேளை நான் படிப்பை பாதியில் நிறுத்தவும் நேரலாம். அதனால் நான் எனக்குள்ளேயே ஒன்று சொல்லிக் கொண்டேன். சமாளித்துக் கொள் என்று கூறிக் கொண்டேன். எனது வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 2 கி.மீ தூரம் நடந்து கல்லூரிக்கு வருவேன். கல்லூரி 11 மணிக்கு முடியும். மீண்டும் 2 கி.மீ வீடு நோக்கி. வீட்டுக்குவந்துதான் இயற்கையின் அழைப்பை ஏற்பேன்.

இந்த காலகட்டம் பெண் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் சுகாதாரமான கழிவறை எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை எனக்கு உணர்த்தியது.

அதுவே பின்னாளில் நான் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரானதும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 16,000 கழிவறைகளைக் கட்ட உத்வேகம் அளித்தது" என்றார்.

அந்தக்காலத்தில் பெண்கள் பொறியியல் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதற்கு சுதா மூர்த்தியின் பயணம் சிறந்த உதாரணம்.
அது இல்லையே, இது இல்லையே என்று குறை கூறுவதை விடுத்து இருப்பதைக் கொண்டே முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம். எனக்கு இது இல்லையே என்று புலம்புவதைவிட எதிர்காலத்தில் இதை நான் பிறருக்குச் செய்வேன் என்ற உத்வேகம்தான் சுதா மூர்த்தியை வெற்றிக்கொடி நாட்ட வைத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x