Last Updated : 27 Nov, 2019 08:29 AM

 

Published : 27 Nov 2019 08:29 AM
Last Updated : 27 Nov 2019 08:29 AM

விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள் - போலோ

போலோ என்பது குதிரையின் மீதுஅமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. 2 அணிகள் விளையாடும் இந்தவிளையாட்டில், ஒவ்வொரு அணியிலும்தலா 4 வீரர்கள் இருப்பார்கள். எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை அடிப்பதே இந்த விளையாட்டின் முக்கிய லட்சியம்.

போட்டி நேரத்தில் அதிக முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தைச் செலுத்தும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 7 நிமிடங்களைக் கொண்ட 4 சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. சில சமயங்களில் 8 சுற்றுகளைக் கொண்டதாகவும் இப்போட்டி நடத்தப்படும்.

இந்த ஆட்டம் முதலில் ஈரானில் ஆடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாக இருந்துள்ளது. அப்போது போலோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா 100 வீரர்கள் வரை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானில் இருந்து அரேபியா, திபெத், சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த விளையாட்டு பரவியது. இந்தியாவில் 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசர்களால் போலோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருந்து போலோ விளையாட்டைக் கற்றுக்கொண்டனர்.

அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்களை அமைத்த ஆங்கிலேயர்கள் மத்தியில் முதலில் இந்த விளையாட்டு பரவியது இதைத் தொடர்ந்து ஐரோப்பிய போலோ கிளப்பை 1859-ம் ஆண்டு சில்சார் எனும் இடத்தில் அவர்கள் தொடங்கினர்.

பின்னர் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வெள்ளையர்கள் மூலம் இங்கிலாந்தில் போலோ விளையாட்டு பிரபலமாக, 1869-ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல் முறையாக போலோ விளையாட்டு போட்டி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இப்போட்டி பரவியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பலநூற்றாண்டுகளாக போலோ ஆடப்பட்டாலும், முதலாவது சர்வதேச போலோ போட்டி நடத்தப்பட்டது 1886-ம் ஆண்டில்தான். இதில் அமெரிக்க அணிசாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அதன்பின்னர் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மாறி மாறி சர்வதேச போலோ போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

1983-ம் ஆண்டில் அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சர்வதேச போலோ கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் (1987-ம் ஆண்டு) உலகபோலோ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் அர்ஜென்டினா அதிகமுறை கோப்பையை வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x