

உலகிலேயே முதல் முறையாகப் பள்ளியில் நடத்தப்படும் தவளை சோதனைக்கு அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணம் மாற்று கண்டுபிடித்துள்ளது.
பள்ளி அறிவியல் வகுப்புகளில் உயிரியல் பாடம் கற்பிக்கப்படும் போது செய்முறை சோதனைக்காக ஆசிரியர்கள் தவளைகளை அறுத்து, மாணவர்களிடையே பாகங்களை விளக்கிப் பாடம் நடத்துவது வழக்கம். (எனினும் இப்பழக்கம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது)
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தின் பள்ளிகளிலும் தவளைகள் கொல்லப்பட்டு, பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது நியூ போர்ட்டில் ஜே.டபிள்யூ. மிட்செல் பள்ளியில் தவளை செய்முறை விளக்கத்துக்கு நிஜ தவளைகளுக்குப் பதிலாக செயற்கையான சிந்தடிக் தவளைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து பாஸ்கோ கவுண்ட்டி மேலாளர் பிரவுனிங் கூறும்போது, ''உலகிலேயே முதல் முறையாக மிட்செல் பள்ளிதான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. சுமார் 15 டாலர்களுக்கு செயற்கைத் தவளைகள் கிடைக்கின்றன. இதன்மூலம் நிஜத் தவளைகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
தண்ணீர், உப்பு மற்றும் நார்களைக் கொண்டு இந்த செயற்கைத் தவளைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்தும் பயன்படுத்த முடியும். கேடு விளைவிக்கக் கூடிய நச்சுப்பொருட்கள் இல்லாததால், இவை இயற்கைக்குப் பாதுகாப்பானவை'' என்று தெரிவித்துள்ளார்.
விலங்குகள் நல அமைப்பான பீட்டா, ஒவ்வோர் ஆண்டுகளும் வகுப்பறைகளில் 10 லட்சம் தவளைகள் கொல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளது.