Published : 26 Nov 2019 03:40 PM
Last Updated : 26 Nov 2019 03:40 PM

தமிழ்நாட்டுப் பாலில் நச்சுத் தன்மை உள்ளதா? எது நல்லது, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

நவ. 26- தேசிய பால் தினம் | இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின் நினைவாக அவரின் பிறந்த நாள், தேசிய பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இனம், மொழி, வாழ்விடத்தைப் பொறுத்து மாறாத உணவுப்பொருள் பால். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உலகமெங்கும் பாலின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குழந்தைகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்துப் பொருளாக பால் அறியப்படுகிறது. இந்தப் பாலில் கலப்படம் அதிகமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே சர்ச்சை எழுந்தது.

இந்தியாவில் நாள்தோறும் சுமார் 14.68 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 68% அதிக கலப்படத்துடன், தரமற்று இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்திய தரச்சான்று நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி பால் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் பால் கெட்டியாகவும், நீண்டநாள் பயன்படுத்தும் வகையிலும் இருப்பதற்காக பல்வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்னால், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தரக் கட்டுப்பாட்டின்படி, பாலில் அஃப்லடாக்சின் எம்1-ன் அளவு 0.5 ppb /kg என்ற அளவில் இருக்கவேண்டும். மாடுகளுக்கான உணவில் 30 ppb/kg என்ற அளவிலும் கால்நடைகளிடம் 20 ppb/kg என்ற அளவிலும் இருக்கவேண்டும். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக அஃப்லடாக்சின் எம்1 நச்சு தமிழகப் பாலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நச்சுத்தன்மையில் தமிழகம் முதலிடம்

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி. டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அளித்த எழுத்துபூர்வ பதிலில் "தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தியாகும் பாலில் அஃப்லடாக்சின் எம்1 (Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக உள்ளது. பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தமிழகத்தின் 551 பால் மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாலில் உள்ள சத்துகள் குறித்தும் அதில் இருப்பதாகக் கூறப்படும் நச்சுத்தன்மை பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர் கோமதியிடம் பேசினோம். ''நம் தலைமுறை நிலத்தைப் பாழ்படுத்தியதால் கால்நடைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன. கடந்த கால வாழ்வியல் முறை கால்நடை சார்ந்து இருந்தது. பசும்புல், வைக்கோல், அகத்திக்கீரை என இயற்கையான தாவரங்களைத் தீவனமாக உட்கொண்ட பசுக்கள், அதிக ஊட்டச்சத்து மிக்க பாலை அளித்தன. ஆனால் இப்போது சூழல் மாறிவிட்டது. மாடுகள் இன்று போஸ்டர்களையும் பிளாஸ்டிக் உறைகளையும் தின்று வயிறு வளர்க்கின்றன. அவற்றால் எப்படி ஆரோக்கியமான பாலைக் கொடுக்க முடியும்?

பொதுவாக பாக்கெட் பாலைவிட பசும்பாலில் அதிக சத்துகள் இருக்கின்றன. 100 மில்லி பாக்கெட் பாலில் கலோரி 60, 3 கிராம் புரோட்டீன், 3.3 கிராம் கொழுப்பு, குறிப்பிட்ட அளவு கால்சியம் உள்ளது. ஆனால் அதே அளவிலான பசும்பாலில் அதீத சத்துகள் உள்ளன. 142 முதல் 150 கலோரி, 150 கால்சியம், 7.7 கிராம் புரோட்டீன், 7.7 கிராம் கொழுப்பு உள்ளது. அத்துடன் 8 கிராம் விட்டமின் ஏவும் மெக்னீசியம் சிறிதளவும் உள்ளன.

சைவ உணவுக்காரர்களின் வரப்பிரசாதம்

முறையான தீவனங்களை உட்கொள்ளும் கால்நடைகள் அளிக்கும் பாலால் சத்துகள்தானே தவிர, கேடு இல்லை. சைவ உணவை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு போதிய அளவு புரோட்டீனும் கொழுப்பும் பருப்புக்கு அடுத்து பாலில் இருந்தே கிடைக்கிறது. வைட்டமின்களும் கால்சியமும் பாலில் நிறைந்துள்ளன'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி.

பாலில் அஃப்லடாக்சின் எம்1 என்னும் நச்சுத் தன்மை அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு பால் பதப்படுத்தலின்போது சேர்க்கப்படும் வேதிப்பொருட்களும் முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் கால்நடைத் தீவனம் மற்றும் உணவில் உண்டாக்கும் சுகாதாரக் குறைபாடே நச்சுக்கான முக்கியக் காரணம் என்கிறார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவரான ராஜேந்திரன்.

அவர் கூறும்போது, ''பொதுவாக வெயில் காலங்களில் அஃப்லடாக்சின் எம்1 நச்சு உருவாவதில்லை. மழைக் காலத்தில்தான் ஈரப்பதம் காரணமாக ஏற்படும் பூஞ்சையால் அஃப்லடாக்சின் உருவாகிறது.

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தானிய வகைகள், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றை நன்றாகக் காயவைத்து சேமித்து வைக்கவேண்டும். ஈரப்பதமாக உள்ள தீவனத்தில் உருவாகும் பூஞ்சைகள், அஃப்லடாக்சினைத் தோற்றுவிக்கின்றன. கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் தரமான மூலப்பொருட்களையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மாநில சுகாதாரத்துறை அதை உறுதிப்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் பங்கு
விவசாயிகள் மாடுகளுக்குக் கொடுக்கும் சோளத்தட்டு, வைக்கோல், கடலைக்கொடி ஆகியவற்றையும் முறையாகக் காயவைத்துப் பராமரிக்க வேண்டும். மழைக் காலங்களில் அவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி, பாதுகாக்க வேண்டும். நச்சு குறித்த விழிப்புணர்வை கால்நடை வளர்ப்போரிடையே ஏற்படுத்த வேண்டும். பாலைக் கொள்முதல் செய்யும்போதோ, பதப்படுத்தும்போதே எவ்வித நச்சும் ஏற்படுவதில்லை. கால்நடைகள் வழியாகவே நச்சு கடத்தப்படுகிறது'' என்கிறார் ராஜேந்திரன்.

பாலே தேவையில்லை

இதற்கிடையே குழந்தைகளுக்குப் பால் கொடுப்பது அவசியமே இல்லை என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் முத்துராஜா. அவர் கூறும்போது, ''பாலில் 90% தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் உள்ள கால்சியம், புரோட்டீன் ஆகிய சத்துகள் ராகி கூழில் அதிக அளவு உள்ளது. முட்டையில் அதிக புரோட்டீன் கிடைக்கிறது. வேளாண்மை நாடான இந்தியாவில் பாலின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

குறிப்பாக பாலில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்கும்போது பசி கட்டுப்படுத்தப்படுகிறது. ராகி கூழ் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. இதனுடன் 3 வேளை சரிவிகித உணவை குழந்தைகளுக்கு அளித்தாலே போதும்'' என்கிறார் மருத்துவர் முத்துராஜா.

பாலை பதப்படுத்தி, அனுப்புவது குறித்துக் கேட்டறிய துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தொடர்புகொண்டோம். அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பால் இனிப்புகள் என மக்களின் வாழ்க்கையில் பால் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. இந்தியாவில் பால் பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை தடுக்காவிட்டால், 2025-ம் ஆண்டில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பை 87% மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட பாலில் கலப்படம், நச்சு ஆகியவை ஏற்படாததை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி நிலத்தை மாசுபடுத்துவதோடு, கால்நடைகளுக்கும் தீங்கிழைப்பதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x