Last Updated : 25 Nov, 2019 10:01 AM

 

Published : 25 Nov 2019 10:01 AM
Last Updated : 25 Nov 2019 10:01 AM

செல்போனுக்கு அடிமையாகிவிட்ட குழந்தைகளை மீட்பது எப்படி?- யோசனைகள் சொல்லும் குழந்தை இலக்கிய படைப்பாளி

கற்பனைவளம், படைப்பாற்றலை புத்தகவாசிப்புதான் வளர்க்கும். செல்போன் வாசிப்பு அந்தளவுக்கு பயன்தராது என்கிறார் சிறுவர் இலக்கிய படைப்பாளியும், பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றவருமான தேவி நாச்சியப்பன்.

செல்போன் இல்லாத வாழ்க்கையை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கத் தயாராக இல்லை. அந்தளவுக்கு மனித வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது செல்போன். அதனால் கிடைக்கும் பலன்களைவிட, பாதிப்புகளே அதிகம்.

அதேநேரத்தில் மனிதனைப் பண்படுத்தும் புத்தக வாசிப்பைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றிய காலத்திலும், ஓய்வுபெற்ற பிறகும் குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்குவித்து வருகிறார் சிறுவர் இலக்கிய படைப்பாளியும், அண்மையில் பால சாகித்தியபுரஸ்கார் விருது பெற்றவருமான தேவி நாச்சியப்பன். இவர், பிரபல குழந்தை இலக்கியப் படைப்பாளி அழ.வள்ளியப்பாவின் புதல்வி என்பதுகுறிப்பிடத்தக்கது. சிறுவர் இலக்கியத்தில் 12 புத்தகங்கள் வரை எழுதியுள்ள இவர், மாநில நல்லாசிரியர் விருது, தமிழ்ச் செம்மல் விருது உள்பட13-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். புத்தக வாசிப்பின் அவசியம்குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவித்த தேவி நாச்சியப்பன், அதற்கான சில யோசனைகளையும் முன்வைக்கிறார்.

"மாற்றம் முதலில் வீ்ட்டில் இருந்துவர வேண்டும். பெற்றோர் டிவி, பார்த்தாலும், செல்போன் பயன்படுத்தினாலும், புத்தக வாசிப்புக்கும் அவசியம்நேரம் ஒதுக்க வேண்டும். அவ்வாறுசெய்தால் அந்த நேரத்தில் குழந்தைகளும் புத்தகம் வாசிப்பார்கள். ஆசிரியர்களை குறை சொல்லிப் பயனில்லை. ஏனென்றால் போட்டி நிறைந்த உலகில்,மதிப்பெண் அடிப்படையில் பாடம் சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதால், புத்தக வாசிப்பைஊக்குவிக்க நேரம் இருக்காது.

குழந்தைகளுக்கு 3 வயதில் இருந்தே புத்தக வாசிப்பைக் கற்றுத்தர வேண்டும். அந்த வயதில் பெரிய வண்ணப் படங்களுடன்கூடிய கதைப் புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லலாம். அதை அரைகுறையாகப் படித்தாலும் நாளடைவில் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துவிடும்.

கோடை விடுமுறையை பல பொழுதுபோக்குகளுடன் கழித்தாலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்க கோடை வகுப்புகள், போட்டிகள் நடத்தலாம். இதற்காக ஓரிரு நாட்களை ஒதுக்கலாம்.

ஒவ்வொரு நூலகத்திலும் குழந்தைகளுக்கு தனிப்பிரிவை உருவாக்கி, குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தலாம். பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் மூடிக் கிடக்கிறது. இவற்றை முதலில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். 2000-ம்ஆண்டில் தமிழக அரசு பூங்கொத்து என்ற திட்டம் கொண்டு வந்தது.

அதன்படி, ஒவ்வொரு வகுப்பறையிலும் கயிறு கட்டி புத்தகத்தை தொங்கவிட்டிருப்பார்கள். இடைவேளை நேரங்களில் அந்தப் புத்தகத்தை மாணவர்கள் எடுத்துப் படிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இரண்டு ஆண்டுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்கலாம்.

முன்பெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை பாட வகுப்பு இருந்தது. அப்பாட வேளையில் நூலகத்துக்குப் போய் புத்தகங்களை படிக்கச் சொன்னார்கள். அப்போது ஆசிரியரும் புத்தகம் படிப்பார். இப்போது ஆசிரியர் செல்போன் பார்க்கிறார். மாணவர்களும் செல்போனில் மூழ்கிப் போகிறார்கள். பாடங்களுக்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது போல, நூலகப் பயன்பாட்டுக்கும் வழங்கலாம். அதன்மூலம் புத்தக வாசிப்பைக் கொண்டு வரலாம். மொத்தத்தில் வீட்டில் தொடங்கி, பள்ளிக்கூடம், நண்பர்கள் வட்டம் என்று அனைத்து சூழலிலும் மாற்றம் வந்தால்தான் புத்தக வாசிப்பு சாத்தியமாகும். அதற்கு அரசு எடுக்கும்முயற்சிக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அந்தக் காலம் கனிந்தே தீரும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தேவி நாச்சியப்பன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x