

காரைக்கால்
காரைக்கால் மாவட்டம் அகளங்கண் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வியுடன்வேளாண்மை குறித்து அதிலும் குறிப்பாக இயற்கை வேளாண்மை குறித்து மாணவர்களிடம் புரிதல் ஏற்படுத்தவும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தவும் இயற்கை வேளாண்மை பயிலகம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியை டி.மல்லிகா மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் பள்ளி வளாகத்தில் உள்ளசிறிய இடத்தில் அந்தந்த கால பருவநிலைக்கு ஏற்றவாறு நெல், பயறு, உளுந்து,பருத்தி பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் குறித்துஅனுபவப்பூர்வமாக மாணவர்களிடம், அவர்களின் பங்கேற்புடன் உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டு வருகிறது.
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில்,தற்போது நெல் சாகுபடி செய்யும் விதமாகநாற்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. நடவுப் பணியை தொடங்கி வைத்து தலைமையாசிரியை மல்லிகா பேசியபோது, "எத்துறையில் நாம் பணியாற்றினாலும் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு விவசாயி. இதை மாணவர்களின் உள்ளத்தில் பசுமரத்தாணி போலபதிய வைக்க வேண்டும் என்பதே பள்ளியின் தலையாய நோக்கம். அதனால்தான் மாணவர்களுக்கு இயற்கை முறை விவசாயத்தின் அவசியம் குறித்தும்அதற்கான வழிமுறைகள் குறித்துசெயல்வழி கற்பித்தல் நடைபெறுகிறது" என்றார்.
உள்ளூர் விவசாயி மாணிக்கம் வழிகாட்டுதலின் பேரில், 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் நாற்று நடவு செய்தனர்.