நீதிபதி கனவை சாத்தியமாக்கலாம் மாணவர்களே!

நீதிபதி கனவை சாத்தியமாக்கலாம் மாணவர்களே!
Updated on
2 min read

மனோஜ் முத்தரசு

மாணவர்களே உங்களிடம் ‘நீ என்னாவாக ஆசை படுகிறாய்’ என்று ஆசிரியர் கேள்வி எழுப்பினால், டாக்டர், இன்ஜினீயர் என்று கூறாமல், இனி ‘நீதிபதி ஆவேன்’ என்று தைரியமாக கூறுங்கள்.

அது எப்படி சாத்தியம் என்று தானே நினைக்கிறீர்கள். அது சாத்தியம் தான் மாணவர்களே...

ராஜஸ்தான் மாணவன் மயங்க் செய்த சாதனையை நாம் செய்ய முடியாதா என்ன? அதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

நீங்கள் 10-ம் வகுப்பு முடித்ததும், பதினொன்றாம் வகுப்புக்கு வரலாறு பாடப்பிரிவை தேர்வு செய்யவேண்டும். கணிதம், கணினி, அறிவியல் போன்றபாடத்தையும் தேர்வு செய்யலாம். ஆனால், நீங்கள் 12-ம் வகுப்பு முடித்ததும் சட்டப்படிப்பை தேர்வு செய்யவேண்டும். அதனால், வரலாறு பாடப்பிரிவை தற்போது தேர்வு செய்தால், சட்டம் படிக்க சற்று சுலபமாக இருக்கும்.

பள்ளிப்படிப்பை முடித்தும், இளநிலைச் சட்டப்படிப்பை தேர்வு செய்யவேண்டும். 5 ஆண்டுகள் கொண்ட இளநிலை சட்டப்படிப்பில் உள்ள பிபிஏ எல்எல்பி (BBA LL.B), பி.காம் எல்எல்பி (B.com LL.B), பிஎஸ்சி எல்எல்பி (B.Sc.LL.B), பிஏ எல்எல்பி (BA LL.B) ஏதேனும் தேர்வு செய்யவேண்டும்.

17 வயதில் நீங்கள் 12-ம் வகுப்பு முடித்தீர்கள் என்றால், இளநிலை சட்டப்படிப்பு முடிக்கும்போது உங்களுக்கு 22 வயது முடிந்து இருக்கும்.

இளநிலை சட்டப்படிப்பில் அரியர் எதுவும் இல்லாமல் முடித்த கையோடு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் நீதிபதி தேர்வை நீங்கள் எழுதலாம்.

இளநிலை அல்லது முதுநிலை முடித்த கையோடு தேர்வு எழுதுபவர்கள் 22- 27 வயது வரை எழுதலாம்.

சிவில் நீதிபதியாக தேர்வு எழுதுபவர்கள் வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

சிவில் நீதிபதி தேர்வு 2 கட்டமாக நடைபெறும். ஒன்று முதல் நிலை எழுத்துத் தேர்வு (Preliminary), இரண்டாவது முதன்மை(Main) எழுத்துத் தேர்வு.

முதல்நிலை எழுத்துத் தேர்வானது, 100 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்விகள்தான் (ஒன் வேர்டு) இருக்கும்.

3 பகுதிகளில் கேள்விகள் இடம்பெறும் முதல்நிலை தேர்வானது, 3 மணி நேரம் நடைபெறும். இதில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும், கால்(0.25) மதிப்பெண் குறைக்கப்படும். இடஒதுக்கீடுக்கு ஏற்றவாறு 30,35,40 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சியாகும்.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்வு எழுதவேண்டும்.

அதில் மொழிபெயர்ப்பு (100 மதிப்பெண்), சட்டம் தாள்-1 (100), சட்டம் தாள்-2 (100), சட்டம் தாள்-3(100) மற்றும் நேர்முக தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதில் 30 சதவீதம் (எஸ்சி, எஸ்டி), 35 சதவீதம் (பிசி, எம்பிசி) எடுத்தால் தேர்ச்சி பெறலாம்.

இதில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் கொண்டு நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சிவில் தேர்வு குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் கூறியதாவது:நம்மால் நீதிபதி ஆக முடியாது, அது பெரிய காரியம் என்று தங்களின் நினைப்பை மாணவர்கள் மாற்ற வேண்டும். தற்போது ஜெய்ப்பூர் மாணவர் மயங்க் பிரதாப் சிங் 21 வயதில் நீதிபதி ஆகியிருக்கிறார். அந்த மாணவருக்காக சிவில் தேர்வு நடைமுறைகளை 22 வயதில் இருந்து 21 வயதாக அம்மாநில அரசு குறைத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டே தமிழகத்தில் 22 வயதான கீர்த்திகா என்ற மாணவி சீவில் நீதிபதியாக தேர்வாகி இருக்கிறார். அவருடன் 22 இளம் பெண்கள் நீதிபதியாகி உள்ளனர்.

நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சி முடித்தவுடன், உரிமையியல் நீதிபதியாக அல்லது மாஜிஸ்திரேட்டாக பதிவியேற்கலாம்.

24 வயதில் நீதிபதியாக ஒருவர் பதவியேற்றால், அவர் ஓய்வு பெறும்போது (ஓய்வு 62 வயது) உச்ச நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பைக்கூட ஏற்க வாய்ப்பு உள்ளது. சிவில் நீதிபதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பார் கவுன்சில் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமல்ராஜ் கூறினார்.

நீதிபதியாக கனவு கொண்டுள்ள மாணவர்கள்கூட, பல வழக்கறிஞர்கள் வழக்குகள் கிடைக்காமல் இருப்பதாகவும், சட்டம் ஒன்றுக்கும் உதவாது என்றும் பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் மனதை மாற்றுகிறார்கள்.

எனவே மாணவர்களே நாளைய இளம் நீதிபதிகளாக மாறி, அந்த கருத்துக்களை உடைக்கும் வகையில் செயல்படுங்கள்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in