

நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து அனைத்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு விவாதிக்க உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் ஜவடேகர் கூறியதாவது:நாங்கள் அடுத்த மாதம் அனைத்துமாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை அழைத்து ஒரு சந்திப்பு நடத்தஉள்ளோம். அதில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து விவாதிக்க உள்ளோம்.
நாட்டில் ஒரு நாளைக்கு 25 முதல்30 டன் வரை நெகிழிக் கழிவுகள் வருகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டுபங்கு மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மேலும் மொத்த நெகிழிக் குப்பைகளும் வடிகால்கள், கடற்கறைகள், சாலைகள் மற்றும் வேறு இடங்களில் இருப்பது தொடர்கிறது.
மக்கள் நெகிழி பைகள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் வேளையில் நெகிழி பைக்கு மாற்றாக துணிப் பைகள் அல்லது சணல் பைகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஜவடேகர் கூறினார்.
அப்போது நெகிழிக் குப்பைகள் குறித்து அதிக கேள்விகள் உள்ளன. இதுகுறித்து முழுமையாக விவாதிக்க தனியாக நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
மேலும், “இந்த அவை நாட்டில் உள்ள130 கோடி மக்களின் பிரதிநிதிகளுக்கானது. இது போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும். இங்குள்ள அனைவரும் நெகிழிக் குப்பையை ஒழிக்க உறுதிமொழி எடுப்போம். இந்த மொத்த அவையும் இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.-பிடிஐ