Published : 21 Nov 2019 02:07 PM
Last Updated : 21 Nov 2019 02:07 PM

அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

சென்னை

அரசுப்பள்ளிகளுக்கு பலம் சேர்க்க கரம் கோர்ப்போம் என்று முன்னாள் மாணவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றலைத் தடுத்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக ஜெயலலிதா மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்குவதைத் தொடங்கி வைத்தார். இதனால் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தற்போதைய அரசு 2019-20 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சிக்காக ரூ. 28,757.62 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கினாலும், இது என் பள்ளி, அதன் வளர்ச்சியில் நானும் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறேன் என்ற எண்ணம் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதயத்தில் உருவானால்தான் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேன்மேலும் உயர்த்தி அரசுப்பள்ளிகளை மெருகூட்டிட வழிவகை செய்ய முடியும்.

இதன்தொடர்ச்சியாக, 5-11-2019 அன்று முதல்வர் இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தை (https://contribute.tnschools.gov.in) தொடங்கி வைத்தார். எனவே, அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்டநிறுவனங்களும் (என் ஜிஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) மூலம் அரசுப்பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.

2018-2019 ஆம் ஆண்டு எனது அழைப்பினை ஏற்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் 519 அரசுப் பள்ளிகளில்ரூ. 58 கோடி மதிப்பில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற பணிகளைச் செய்தன.

அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் சிறிய அளவிலான பழுதடைந்துள்ள டேபிள், சேர், ஆய்வுக்கூடப் பொருட்கள், எலெக்ட்ரிக் பொருட்கள் போன்றவைகளை மாற்றியமைக்கவும், பழுது நீக்கவும் அந்தந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களும், பெற்றோர் ஆசிரியர் கழகங்களும், தலைமை ஆசிரியர் மூலம்மேற்கொள்ளலாம். இதுபோன்ற செயல்களினால் பொருள்கள் விரயமாகாமல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும், அரசுப் பள்ளிகளில் தேவையானகட்டமைப்பு வசதிகளைச் செய்து தர விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு, உரிய அனுமதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டுமென்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்பும் நல்ல உள்ளம் படைத்த பழைய மாணவர்கள் மற்றும் நல்ல நிலையில் உள்ளவர்கள் தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை https://contribute.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் எந்தப்பள்ளிக்கு நிதியுதவி வழங்க விரும்புகின்றனரோ அந்தப் பள்ளிக்கு வழங்கலாம்.

இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதியானது, வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவுமறைவின்றி உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை நிதியுதவி வழங்கியவர்கள் அறியலாம். மேலும், இணையதளம் மூலம் வழங்கப்படும் நிதிக்கு உடனடியாக பற்றுச்சீட்டு வழங்கப்படுவதால், நிறுவனங்களும் நன்கொடையாளர்களும் அத்தொகைக்குரிய வருமானவரி விலக்கினையும் பெறலாம். தாங்கள் வழங்கிய நிதியால் நடைபெறும் பணியின் நிலையினை இணையதளம் மூலம் அறிந்து கொள்வதுடன்,சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணி நடைபெறுவதை நேரடியாகவும் பார்வையிடலாம்.

கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட முன்னாள் மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

அனைவரும் வாருங்கள், ஒன்றுசேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x