

காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இயங்கி வருவதாகவும் மாணவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை எழுப்பின. அவையின் மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை முடங்கியுள்ளதாகக் கூறினார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், ''ஜம்மு காஷ்மீரில், பள்ளத்தாக்கு உட்பட அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்பகட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் 98 சதவீத மாணவர்கள் வருகை பதிவாகி உள்ளது. மாணவர்கள் கூடிப் பேச எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
அதேபோல காஷ்மீரில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக இயங்கி வருகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.