Published : 20 Nov 2019 12:12 PM
Last Updated : 20 Nov 2019 12:12 PM
பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் பாதிக்கப்படுவதாக பெற்றோரும், மருத்துவர்களும் புகார் தெரிவிப்பதால், பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்த வசதியாக நான்கு முறை 'வாட்டர் பெல்' அடிக்க ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது வரும் திங்கள் முதல் அமலுக்கு வருகிறது.
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.20) நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் பேசுகையில், "குழந்தைகள் நல ஆணைய பரிந்துரைப்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பள்ளி வேலை நேரம் பின்பற்றப்பட வேண்டும். அனைத்து சிறப்பு வகுப்புகளும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் இருக்க வேண்டும்.
பள்ளிகளிலிருந்து குழந்தைகள் சூரிய அஸ்தமனத்துக்குள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் செயல்பட வேண்டும். அத்துடன் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய துணைக்குழுவை கல்வித்துறை இயக்குநர் அமைக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளிகளில் போதிய அளவில் தண்ணீர் அருந்தாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகுவதாக மருத்துவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். வீட்டிலிருந்து எடுத்து செல்லும் பாட்டிலில் தண்ணீர் அருந்தாமல் அப்படியே குழந்தைகள் எடுத்து வருவதாகவும், பள்ளியில் தண்ணீர் அருந்த அவகாசம் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். எனவே நாளொன்றுக்கு நான்கு முறை குழந்தைகள் தண்ணீர் பருக வசதியாக 'தண்ணீர் அருந்த மணி' அடிக்க வேண்டும். இதை வரும் திங்கள்கிழமை முதல் செயல்படுத்த வேண்டும்," என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!