Published : 20 Nov 2019 07:24 AM
Last Updated : 20 Nov 2019 07:24 AM

ஐஐடி, என்ஐடி.க்கள் நிபுணத்துவத்தால் காற்று மாசுவை தடுக்க முடியும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி) மற்றும் ஷிபூரில் உள்ள இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஇஎஸ்டி) போன்ற கல்வி நிறுவனத்தின் நிபுணர்களுடான வருடாந்திர ஆலோசனை கூட்டம்டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது.

இதில் ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஇஎஸ்டி.யைச் சேர்ந்த இயக்குநர்கள், நிபுணர்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் குடியரசு தலைவர்ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

டெல்லி மற்றும் பல நகரங்களில் காற்றின் தரம் எல்லா விதிமுறைகளையும் தாண்டி மோசமடைந்து வருகிறது.

தற்போது நகரங்களில் புகை மூடிக்கிடக்கிறது. அதனால், எதிரில் உள்ள பொருட்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசு அடைந்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிறைய தகவல்களைக் கூறுகிறீர்கள். ஆனால், அந்த எதிர்கால பாதிப்புகள் இப்போதே வந்துவிட்டதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கல்வி நிறுவனங்களில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து,காற்று மாசு குறித்து மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காற்று மாசுவுக்கு தீர்வு காண ஐஐடி, என்ஐடி போன்ற நிபுணத்துவம் மிக்க கல்வி நிறுவனங்களால் முடியும் என்று நம்புகிறேன்.

நாம் இதற்கு முன் சந்திக்காத ஒரு சவாலை இப்போது எதிர்கொள்கிறோம். கடந்த 2 நூற்றாண்டுகளில் ஹைட்ரோகார்பன் உலகத்தின் முகத்தை மாற்றிவிட்டது. நமது நாட்டில்கணிசமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை அதில் இருந்து மீட்க நாம் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் எளிதான வாழ்க்கைமுறையை வழங்க முடியும்.

விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது எப்படி என்று மாநில ஆளுநர்களிடம் அடுத்த வாரம் விவாதிக்கவுள்ளேன். தொழில்நுட்பம் ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x