Last Updated : 18 Nov, 2019 07:49 AM

 

Published : 18 Nov 2019 07:49 AM
Last Updated : 18 Nov 2019 07:49 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: கிரிக்கெட் வரலாறு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1931-ம் ஆண்டு முதல் ஆடி வந்தாலும், இந்திய அணியால் முதல் 20 ஆண்டுகளுக்கு ஒரு ஆட்டத்தில்கூட ஜெயிக்க முடியவில்லை. இந்தகாலகட்டத்தில் ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகஇந்திய அணி பல தோல்விகளைத்தழுவியது.

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் எந்த அணியாவது ஜெயிக்கவேண்டும் என்றால், “இந்தியாவோட ஒரு மேட்சுக்கு ஏற்பாடு செய்யுங்கப்பா” என்று சொல்லும் சூழலே இருந்தது. இந்திய அணியின் இந்த தோல்விப் பயணத்தை சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 1952-ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டிதான் முடித்து வைத்தது. 1952-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் இந்த முதல் வெற்றி கிடைத்தது. இப்போட்டி இந்திய அணிக்கு 25-வது டெஸ்ட் போட்டி என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

1952-ல் ஹாவர்ட் தலைமையில் இந்தியா வந்த இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், பிப்ரவரி 6-ம் தேதி சென்னை டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் ஹாவர்ட் விலக, அவருக்கு பதிலாக டி.பி.கார் தலைமை தாங்கினார். இந்திய அணிக்கு விஜய் ஹசாரே கேப்டனாக இருந்தார். அவரது தலைமையின் கீழ் பங்கஜ் ராய், முஷ்டாக் அலி, லாலா அமர்நாத், வினு மங்கட், பாலி உம்ரிகர் உள்ளிட்டோரைக் கொண்ட இந்திய அணி இப்போட்டியில் ஆடியது.

24 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட ஜெயிக்காத இந்திய அணியை துச்சமாக மதித்து இப்போட்டியில் களம் இறங்கியது இங்கிலாந்து அணி. ஆனால் வினு மங்கட்டின் அபாரமான பந்துவீச்சு அவர்களை நிலைகுலைய வைத்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களைக் கொடுத்து 8 விக்கெட்களை வினு மங்கட் வீழ்த்த 266 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து. இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி, பங்கஜ் ராய் (111 ரன்கள்), பாலி உம்ரிகர் (130 ரன்கள்) ஆகியோர் அடித்த சதங்களின் உதவியால் 9 விக்கெட் இழப்புக்கு 457 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸைப் போல், இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய வினு மங்கட் 4 விக்கெட்களை வீழ்த்த, இங்கிலாந்து அணி 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை சமன் செய்தது. இந்தியாவெங்கிலும் இந்த வெற்றியை மிகப்பெரிய உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர். இப்போட்டியில் வென்றதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அந்தஸ்து கூடியது.

இந்த சூழ்நிலையில் 1952-ம் ஆண்டின் இறுதியில் தங்களின் முதல் டெஸ்ட் போட்டியை ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x