Published : 15 Nov 2019 01:10 PM
Last Updated : 15 Nov 2019 01:10 PM
டிஜிட்டல் நிறுவனங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று போப்பாண்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாடிகனில் 'டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஃபேஸ்புக், கூகுள், அமேசான் உள்ளிட்ட டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் கலந்துகொண்டன.
அதில் பேசிய போப் பிரான்சிஸ், ''தொழில்நுட்ப நிறுவனங்கள், தாங்கள் அளிக்கும் சேவைகளில் குழந்தைகள் குறித்து சட்ட ரீதியாகவோ தார்மீக அடிப்படையிலோ யோசித்துப் பார்ப்பதில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் எப்படித் தங்களின் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் டிஜிட்டல் நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த டிஜிட்டல் உலகில், நிறுவனங்களின் முழு ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.
அதேபோல இணையதளங்களைப் பயன்படுத்த வயதை உறுதிப்படுத்திக் கொள்வது என்பது தனி மனித உரிமைகளை மீறுவதாக அமையாது. மாறாக, குழந்தைகளைப் பாதுகாக்க உதவும். அதேபோல குழந்தைகள் ஆபாசத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, மொபைல் போன்களில் பயனாளிகளின் வயதைச் சரிபார்க்க வேண்டியது நிறுவனங்களின் கடமை.
படிக்கவும் கற்றுக்கொள்ளவும் இணையம் இளைஞர்களுக்குப் பல விதங்களில் உதவினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத வன்முறைகளுக்கும் அவையே வித்திடுகின்றன. இதன் மூலம் குழந்தைகளின் உடல் மற்றும் உள்ளம் பாதிக்கப்படுகிறது.
அதேபோல குழந்தைகள் வன்முறை தொடர்பான படங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் குழந்தைகளும் இணையத்தை சரியான வகையில் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!