

சென்னை
டான் போஸ்கோ உளவியல் நிறுவனமான நிறைவகத்தின் ஆண்டு விழாவையொட்டி, கற்றல் குறைபாடு குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
டான் போஸ்கோ உளவியல் நிறுவனமான நிறைவகத்தின் ஆண்டு விழா சென்னை கீழ் பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ நிறுவனங்களின் தலைமையகமான சிட்டாடலில்
நடைபெற்றது.
இதையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனநலம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, காகிதம் மடித்தல், கொலாஜ் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 65 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், ஆண்டு விழாவையொட்டி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு கற்றல் குறைபாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறையும், மனநல ஆலோசகர்களுக்கு தற்கொலைத் தடுப்பு பற்றிய பயிற்சிப் பட்டறையும் 2 நாட்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்களும், மனநல ஆலோசகர்களும் பங்கேற்றனர். மாணவர்களின் வாசிப்பை வளப்படுத்தும் ‘இந்து தமிழ்திசை’ யின் ‘வெற்றிக்கொடி’ நாளிதழ் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் நிறைவகத்தின் ஆண்டு விழாவில் மனநலம் தொடர்பான ஒரு நிறுவனம், ஒரு தனி நபர், மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு திரைப்பட இயக்குநர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு மனநலம் சார்ந்து ஆற்றிவரும் பணிகளுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்த்ரிகாவுக்கும், சைமெட் மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் சுரேஷ் குமாருக்கும் வாழ்நாள் சாதனையாளார் விருதும், மனவளர்ச்சியற்ற குழந்தைகள் வளர்ப்பில் உள்ள சமூக, உளவியல் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ‘பேரன்பு’படத்தின் இயக்குநர் ராமுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் சலேசிய சபையின் மாநில தலைவர் அருட்திரு கே.எம்.ஜோஸ், துணை தலைவர் டான் போஸ்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.