

டெல்லியில் காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டதை அடுத்து, அங்குள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது. இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் கடந்த 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது.
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 6-ம் தேதி மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த நவம்பர் 1-ம் தேதி டெல்லியில், காற்று மாசு 542 என்ற அளவில் மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதை அடுத்து, பள்ளிகளுக்கு 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 8-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் காற்று மாசு சற்றே குறைந்ததை அடுத்து 6-ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன.
எனினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைப்படி, காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் காற்று தரக் குறியீட்டின்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது, 51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது, 201-300 புள்ளிகள் இருந்தால் மோசம், 301-400 வரை இருந்தால் மிக மோசம், 401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம், 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகமிகத் தீவிரம் அல்லது நெருக்கடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.