Last Updated : 14 Nov, 2019 09:30 AM

 

Published : 14 Nov 2019 09:30 AM
Last Updated : 14 Nov 2019 09:30 AM

கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் சாதனை: குப்பை மேலாண்மையை கண்காணிக்க புதிய செயல் திட்டம்

குப்பை மேலாண்மை கண்காணிப்பு செயல்திட்டத்தை கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் வி.கே.ஏ. ஜெயரிஸ் ராகவ். உருவாக்கியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருபவர் வி.கே.ஏ. ஜெயரிஸ்ராகவ். தனது ஆசிரியர் பி.கார்த்திகேயனின் வழிகாட்டுதலின்படி, நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் பயன்படும் வகையில், 'குப்பை மேலாண்மை கண்காணிப்பு செயல் திட்டம்' ஒன்றை உருவாக்கியுள்ளார். பள்ளியிலும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிகளிலும் இத்திட்டம் முதல் பரிசு பெற்றுள்ளது. இது குறித்து ஆசிரியர் பி.கார்த்திகேயன், மாணவர் ஜெயரிஸ் ராகவ் ஆகியோர் கூறியதாவது:

நிரம்பிவழியும் குப்பைத் தொட்டிகள்

நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் தினமும் டன் கணக்கில் குப்பை சேருகிறது. குப்பைகளைச் சேகரிக்கமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிமற்றும் ஊராட்சிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் நிரம்பி இவற்றை சில நேரங்களில் துப்புரவு பணியாளர்களால் அடையாளம் காண முடிவதில்லை. தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகள், தொட்டிகளில் உள்ள குப்பையை உண்கின்றன. சில நேரங்களில் அவற்றை கீழே தள்ளிவிடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதேபோல் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் குப்பை கொட்டப்படாமல் காணப்படும். அந்த நேரத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டால், குப்பைத் தொட்டியில் மழைநீர் தேங்கி, டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசுப்புழுக்கள் உருவாகுவதற்கு காரணமாகின்றன. இவற்றை எல்லாம் தடுக்கும்வகையில், இந்த கண்காணிப்பு செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் சாதனம்

அதன்படி ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும் ஒரு சென்சார் பொருத்தப்படும். தொட்டி நிறைந்ததும், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தகவல்தெரிவிப்பதோடு, அதில் புரோகிராம்செய்து வைத்துள்ள செல்போன்எண்ணுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தின் விவரமும், அதில் தெரிந்துவிடும்.

தூய்மை இந்தியா திட்டம்

தொட்டியில் குப்பை நிறைந்ததும், அதில் மேலும் குப்பை கொட்டாமல் இருக்க, தானாக மூடிக்கொள்ளவும் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அடிக்கடி நிரம்பும் குப்பைத் தொட்டிகள், ஓரிரு நாட்களில் நிரம்பும்குப்பை தொட்டிகள் எவை? எவை? அவை எந்தெந்த பகுதியில் உள்ளன? என்பதைக் கண்டறிந்து, அப்பகுதிக்கு துப்புரவு பணியாளர்களை அனுப்பி குப்பையை அப்புறப்படுத்த முடியும். மழை பெய்யும்போது, தொட்டி தானாக மூடிக் கொள்ளும். இதனால் அதில் கொசுப்புழுக்கள் உருவாகாது. தொட்டி நிரம்பி வழிந்தோடுவதால், துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படும்.

ஆசிரியர்கள் பாராட்டு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல்திட்டமானது, நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுமையான இந்த செயல் திட்டத்தை உருவாக்கிய மாணவர் மற்றும்ஆசிரியரை, பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.கே.சுந்தர்ராஜன் மற்றும் ஆசியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x