

தத்தெடுப்பது பற்றி தனது மகள் எழுதிய கட்டுரையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நடிகை சுஷ்மிதா சென்.
முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகியான சுஷ்மிதா சென், 'பிவி நம்பர் ஒன்', 'தஸ்தக்', 'மெய்ன் ஹூன் நா', தமிழில் 'ரட்சகன்', 'முதல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
தனது 24-வது வயதில் 2000-ல் ரெனீ என்ற பெண் குழந்தையை சுஷ்மிதா தத்தெடுத்தார். 10 ஆண்டுகள் கழித்து 2010-ல், அலிசா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.
இப்போது 10 வயதான அலிசா, தத்தெடுப்பது குறித்து பள்ளியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் அந்தக் கட்டுரையைப் படித்துக் காட்டும் வீடியோவை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக கட்டுரையைப் படித்து முடிக்கும் அலிசா, தான் இந்தக் கட்டுரையைத் தனது கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை வைத்து சொந்தமாக எழுதியதாகத் தெரிவித்துள்ளார்.
'நீங்கள் வாழ்க்கையைக் கொடுத்தது ஒரு முறை. எப்படி என்றால், நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்' என்ற கட்டுரையின் வரி தன்னை மிகவும் கவர்ந்தது என்று குறிப்பிட்டுள்ள சுஷ்மிதா, இந்தக் கட்டுரை தனக்குக் கண்ணீரை வரவழைத்தது என்று கூறியுள்ளார்.
தன் மகள்களை இதயத்திலிருந்து பிறந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார் சுஷ்மிதா சென். தனது முதல் மகள் ரெனீயிடம், அவர் தத்தெடுக்கப்பட்டது குறித்துச் சொன்னபோது, அனைவருமே வயிற்றிலிருந்து பிறக்கிறார்கள். நீ விசேஷமானவள், நீ இதயத்திலிருந்து பிறந்தாய் என்று கூறியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.