

துபாய்
துபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான எப்-46 ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் 61.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பிலும் சுந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
மேலும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இரு முறை தங்கப் பதக்கம் வென்ற2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சுந்தர் சிங். இதற்கு முன்னர் 2013 மற்றும் 2015-ம் ஆண்டு தொடர்களில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
துபாய் போட்டியில் சுந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்ற அதே பிரிவில் இந்திய வீரர்களான அஜீத் சிங் 59.46 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான ரிங்கு 4-வது இடம் பிடித்தார். சர்வதேச பாராலிம்பிக் விதிகளின்படி, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு தனிநபர் பதக்கப் பிரிவில் நடைபெறும் போட்டியில் முதல் 4 இடங்களை பெறுபவர்கள் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இதன் அடிப்படையில் தற்போது சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங், ரிங்கு ஆகியோர் அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.