Published : 07 Nov 2019 07:02 AM
Last Updated : 07 Nov 2019 07:02 AM

நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள ‘கேன்டீன்’களில் நொறுக்கு தின்பண்டங்களுக்கு தடை

புதுடெல்லி

நாடு முழுவதும் பள்ளி கேன்டீன்களில் அதிக காரம், இனிப்பு மற்றும் நொறுக்குத் தின்பண்டங்கள் விற்க மத்திய உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளைவிட, கேடு விளைவிக்கும் உணவு பொருட்களே கவர்ச்சியாக இருக்கும். இதை புரிந்து கொள்ளாமல், குழந்தைகளும், மாணவர்களும் நொறுக்கு தின்பண்டங்கள், தரம் இல்லாத எண்ணெய்யில் செய்த பொருட்களை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதனால், வயிற்றுக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இந்நிலையை மாற்ற மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை (எப்எஸ்எஸ்ஏஐ) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எப்எஸ்எஸ்ஏஐ நேற்று வெளியிட்ட உத்தரவு:பல்வேறு பள்ளிகளில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ‘கேன்டீன்'கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கேன்டீன்களில் மாணவர்களின் நலனை பாதுகாக்கும் விதத்தில் உணவுகள் விற்கவேண்டும். ஆனால் கேன்டீன்களில் கேடு விளைவிக்கும் நொறுக்குத் தின்பண்டங்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக கொழுப்புகள் நிறைந்த உணவு, அதிக காரம், உப்பு, இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியவை.

நல்ல உணவு மட்டுமே மாணவர் நலனுக்கு உறுதுணை. இதர தரமற்ற பொருட்கள் மாணவர்களின் உடல்நலனை பாதிக்கும். எனவே பள்ளிகேன்டீன்களில் நொறுக்குத் தின்பண்டங்கள் மற்றும் உடல்நலத்தை பாதிக்கும் உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளுக்கும் பொருந்தும். இதுகுறித்து, உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பள்ளி கேன்டீன்களிலோ அல்லதுஅதை சுற்றியோ நொறுக்குத் திண்பண்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறக்கூடாது. இதுகுறித்து பள்ளி நிர்வாகங்கள் முறையாக அறிவுறுத்தல் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக கண்காணிக்க பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும். தங்கள் கேன்டீன் மற்றும் பள்ளியை சுற்றியுள்ள கடைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.

தங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற விவரங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறைக்கு பள்ளிநிர்வாகங்கள் அறிக்கையாக அனுப்பவேண்டும். அதேபோல், மாவட்ட உணவுபாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறையுடன் இணைந்து பள்ளிகளில் உணவு தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்.

இந்த செயல்பாடுகளை பள்ளி நிர்வாகம் அறிக்கையாக தயார் செய்து மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

‘மாணவர்களின் உடல்நலம் பேணுவது முக்கியம்’ என்ற அடிப்படையில் இந்த உத்தரவை பள்ளி நிர்வாகங்கள் ஏற்று கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x