

புதுடெல்லி
மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஸ்கில்ஸ் பில்ட் (Skills Build) என்ற திட்டத்தை ஐடி நிறுவனமான ஐபிஎம் தொடங்கியுள்ளது. இதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் ஐபிஎம் இணைந்து செயல்பட உள்ளது.
இதன்படி, ஐடிஐ மற்றும் என்எஸ்டிஐக்களில் தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க்கிங், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் இரு ஆண்டுகள் நவீன டிப்ளமோ படிப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஐடிஐ மற்றும் என்எஸ்டிஐ-யில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் பயிற்சி வழங்கப்படும்.
ஐபிஎம் மற்றும் CodeDoor, Coorpacademy மற்றும் ஸ்கில் சாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படிப்புக்கான உள்ளடக்கத்தை வழங்க உள்ளன.
இதுகுறித்து ஐபிஎம் இந்தியாவின் துணைத் தலைவரும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவருமான சைதன்யா ஸ்ரீனிவாஸ் கூறும்போது, ''இந்த முன்னெடுப்பு மூலம் இந்தியாவின் அடுத்த தலைமுறை உலகப் பொருளாதாரத்தை எதிர்த்துப் போட்டியிட உதவுகிறோம். ஸ்கில்ஸ் பில்ட் மூலம் தொழில்நுட்பத் திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும். இது மத்திய அரசின் ஸ்கில்ஸ் இந்தியா திட்டத்துடன் இணைந்து செயல்படுவதாக அமையும்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறும்போது, ''மாணவர்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்க்க ஐபிஎம்முடன் கைகோத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப, அடுத்த தலைமுறையினர் தம்மைத் தகவமைத்துக் கொள்ள இது உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.