சுயமாக சிந்தித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அருகே அரசம்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  மாணவர்களின் படைப்புகளை பார்வையிடும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அருகே அரசம்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்களின் படைப்புகளை பார்வையிடும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை

ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி த.விஜயலட்சுமி கூறினார்.

குழந்தைகள் அறிவியல் மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அரசம்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். இம்மாநாட்டை மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரி த.விஜயலட்சுமி தொடங்கிவைத்து பேசியதாவது:மாணவர்களின் திறன்களை கண்டறிந்து, அங்கீகரிக்கும் பணியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர்களிடம் மாணவர்கள் தைரியமாகக் கேள்விகள் கேட்கவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களின்உதவியோடு சுயமாகச் சிந்தித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

பல தோல்விகளைச் சந்தித்துத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் மிகப்பெரிய விஞ்ஞானிகளாக மாறினர். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை முதுநிலை விஞ்ஞானிஆர்.ராஜ்குமார் பேசும்போது, ‘‘இளம்வயதிலேயே அறிவியல் மனப்பான்மையை, ஆய்வு மனப்பான்மையை உருவாக்குவதுதான் இந்த மாநாட்டின்நோக்கம். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பல ஆய்வுக்கட்டுரைகள் முனைவர் பட்ட ஆய்வுக்கு நிகராக கருதும் அளவுக்கு முதிர்ச்சியோடு உள்ளன. எதிர்காலத்தில் மிகப் பெரியஅறிவியல் ஆய்வுக்கான விதைகள் இங்கே தூவப்பட்டுள்ளன. அறிவியலைக் கொண்டு சமூகத்தை முன்னேற்றவும், வறுமையை ஒழிக்கவும், பசியை போக்கவும் மாணவர்கள் முன்வர வேண்டும்’’ என்றார்.

மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 182ஆய்வுக் கட்டுரைகளில் 10 கட்டுரைகள், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நவம்பர் மாதம் 16, 17-ம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன. அந்த கட்டுரைகளை சமர்ப்பித்தவர்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.அமலராஜன், மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார், துணைத் தலைவர்எம்.வீரமுத்து மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in