

திருவனந்தபுரம்
சிறப்புக் குழந்தைகளுக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் தனியார் அமைப்பு சார்பில் இலவசப் பள்ளி கேரளாவில் தொடங்கப்பட உள்ளது.
நிம்ஸ் மருத்துவமனை சார்பில் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 3-ம் தேதி இந்தப் பள்ளி தொடங்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக நடைமுறைப்படி, சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி இயங்க உள்ளது.
இதுகுறித்து நிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஃபைஸல் கான் பேசும்போது, ''மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காக விரிவான மறுவாழ்வு சேவைகளுக்கான மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி, சிறப்புப் பள்ளியைத் திறக்க உள்ளோம்.
இதற்காக 350 படுக்கைகளுடன் கூடிய எங்களின் மருத்துவமனை தரைத் தளத்தைத் தயார் செய்துள்ளோம். 7 ஆயிரம் சதுர அடி கொண்ட இடத்தில் வெவ்வேறு சிகிச்சைகளுக்காக 80 மாணவர்கள் தங்க முடியும். சிறப்புக் குழந்தைகளுக்காகவே 100 தொழில்முறை பயிற்சி பெற்ற ஊழியர்கள், 14 வெவ்வேறு துறைகளில் பணிபுரிவர்.
குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு முறையாக ரசீது வழங்கப்படும். கட்டணம் செலுத்த விரும்புவர்கள் முழுமையாகவோ, பகுதியாகப் பிரித்தோ கட்டலாம். கட்டணம் செலுத்த முடியாதவர்கள், எதுவும் கட்டத் தேவையில்லை.
அதேபோல மருத்துவமனையில் இருந்து கிடைக்கும் லாபத்தில் இருந்தே சிறப்புப் பள்ளி இயங்கும், மற்றவர்களிடம் இருந்து நன்கொடையோ, பணமோ பெறப் போவதில்லை.
கேரளா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான எம்.கே.சி. நாயர் தலைமையில் சிறப்புப் பள்ளி இயங்கும்'' என்றார் ஃபைஸல் கான்.
ஐஏஎன்எஸ்