

சென்னை
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத்தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்துகிறது. இந்த தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்ட தேர்வு மாநில அளவிலும், அதில்தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாக தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.
மாதம்தோறும் உதவித்தொகை
தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுமூலம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு படிக்கும்போது மாதம்தோறும். ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பிஎச்டி படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம்.
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத்தேர்வு (முதல் கட்ட தேர்வு) தமிழகம் முழுவதும் 514 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை படிப்பறிவுத்தேர்வும் நடந்தன. இத்தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் ஜி.ஆர்.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடைபெற்றது.
மே மாதம் தேசிய அளவில் தேர்வு
மாநில அளவில் நடத்தப்பட்ட முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் 2-வது கட்ட தேர்வுக்கு தகுதிபெறுவர். இத்தேர்வானது அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.