

புதுடெல்லி
காற்று மாசு காரணமாக இந்திய மக்கள் தங்களின் ஆயுட்காலத்தில் 7 ஆண்டுகளை இழந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வட மாநிலங்களான பிஹார், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப்,உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்றவை சிந்து - கங்கை சமவெளி என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 48 கோடி மக்கள் இந்த பகுதியில்தான் வாழ்கின்றனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2016 வரை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வடமாநிலங்களில் காற்று மாசு கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக, மிக ஆபத்தான நிலையில் உள்ளது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC)எரிசக்தி கொள்கை நிறுவனம் தயாரித்த காற்றின் தர வாழ்க்கை அட்டவணையில் (AQLI) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு காற்றின்மாசு சுமார் 72 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்கள் தங்களின் வாழ்நாளில் 3.4 ஆண்டுகள் முதல் 7.1 ஆண்டுகள் வரை இழக்கின்றனர். இந்தியா தனது தேசிய காற்று தூய்மை திட்டத்தை (என்சிஏபி) சரியாக செயல்படுத்தி, காற்று மாசுவை சுமார் 25 சதவீதம் குறைத்தால், இந்தியர்களின் ஆயுட்காலத்தை 1.3 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்து டெல்லி மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவர் அரவிந்த் குமார் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மோசமான காற்றில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம். டெல்லியில் பொது மருத்துவ அவசரநிலை கொண்டு வந்து, காற்று மாசைகுறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தமான காற்றை சுவாசிப்பது மனிதனின் உரிமையாகும்” என்றார்.
அசாம் எம்.பி. கரவ் கோகோய் கூறும்போது, “மாசுக் கட்டுபாடு வாரியம் போன்ற அமைப்புகளை இன்னும்நாம் பலப்படுத்தவேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒருதனிநபர் மசோதா தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.