

மதுரை
ஆண்டுதோறும் பருவ மழை காலம் தொடங்கும்போது பரவும் ஒரு நோய் 'மெட்ராஸ் ஐ'. இந்த நோய்க்கான வைரஸ் சென்னையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்‘மெட்ராஸ் ஐ’ என்றழைக்கப்படுகிறது. ‘மெட்ராஸ் ஐ’ தற்போது தென்மாவட்டங்களில் பரவத் தொடங்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி,விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் ‘மெட்ராஸ் ஐ’ நோயாளிகள் சிகிச்சைக்கு வர ஆரம்பித்துள்ளனர். இந்த கண் நோய் பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தெரியாததே இதற்கு காரணம். இதனால் உயிரிழப்பு ஏற்படாது. ஆனால் கண் வலி, கூசுவது ஆகியவை மூலம் குழந்தைகளை துன்புறுத்தும்.
கிராமங்களில் ‘மெட்ராஸ் ஐ’ வந்தால் கண்ணுக்கு ரொம்ப நல்லது, கண் சுத்தமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால்,தானாக வந்த இந்த நோய் தானாகபோய்விடும் என்று மருத்துவமனைகளுக்கு செல்வது கிடையாது. இதேபோல் விழிப்புணர்வு இல்லாமல் பெட்டிக் கடைகளில் விற்கும் ‘பிதுக்கு மருந்து’ என்ற கண் வலி மருந்தை வாங்கிக் கண்ணில் போட்டுக் கொள்வார்கள். ஆனால், தற்போதுதான் ‘மெட்ராஜ் ஐ’ நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வரஆரம்பித்துள்ளார்கள். இதுகுறித்துமதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவர் யூ.விஜயசண்முகம் கூறியதாவது:கண்களில் இருந்து நீர் வடியும் என்பதால் கைக்குட்டை வைத்திருப்பது நல்லது. மெட்ராஜ் ஐ ‘கன்ஜூன்டிவிட்ஸ்’(Conjunctivitis) என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணில் இருந்து வரும் திரவத்தில் இருந்து காற்று மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் எளிதாகப் பரவுகிறது.
கண் நோய் பரவுவதைத் தடுக்க நோயாளிகளின் தலையணை, டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. அது மற்ற குழந்தைகளுக்குப் பரவக் காரணமாகிவிடும்.
கண் சிவந்து எரிச்சல் அடைந்தாலோ, கண்களில் நீர் வழிந்தாலோ உடனடியாக கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தும் கண் சொட்டு மருந்து இடுவதே முறையான சிகிச்சை.
தனிப்பட்ட சுகாதாரமே இந்தநோயை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மெட்ராஸ் ஐ’ நோயை கண்டறியும் வசதி, அதற்கான சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெட்டிக் கடைகள், மருந்து கடைகளில் விற்கும் பிதுக்கு மருந்துகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. அது கண்களுக்கு அலர்ஜி, பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும் என்றார்.