

அன்பான மாணவர்களே
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் தற்போது உயிருடன் இல்லை. கடந்த 4 நாட்களாக பல தரப்பினரும் பல வகைகளில் முயற்சித்துப் பார்த்தும் அந்த பிஞ்சு உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் நம் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். இனிமேல் இதுபோல் ஒரு சம்பவமும் நடக்கக் கூடாது. நடக்க விடக்கூடாது என்று உறுதி எடுங்கள் மாணவர்களே.
சாலைகளில் பாதாள சாக்கடை மூடியில்லாமல் இருந்தால், பெரிய குழிகள், பள்ளங்கள் இருந்தால் உடனடியாக அதை மூடுவதற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பெற்றோர் அல்லது நண்பர்கள் துணையுடன் அந்த இடத்தைப் பற்றிய தகவலை அதிகாரிகளுக்கு தெரிவிக்க முயற்சி எடுங்கள்.
உங்கள் வீடுகளின் அருகில் நிலம், தோட்டம், அதில் ஆழ்துளை கிணறு (போர்வெல்) போட்டால் அதை சரியாக மூட வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் தம்பி, தங்கைகளை அந்தப் பக்கம் போக விடாதீர்கள். உயிருக்கு ஆபத்தாக இருக்கும் எதைப் பார்த்தாலும், அடுத்தவரிடம் தைரியமாக சொல்லுங்கள். இதுபோல் பலரும் எடுத்துச் சொல்ல தொடங்கினால், மாற்றம் வரும்.
ஒவ்வொருவருரிடமும் இந்த எண்ணம் உண்டாகிவிட்டால், பிறகு அலட்சியத்தின் காரணமாக எந்த உயிரும் பறிபோகாது. வெளியில் விளையாடும் போது உங்கள் பாதுகாப்பு முக்கியம். அதேபோல் மற்றவர்களின் பாதுகாப்பும் முக்கியம். இதை உணர்ந்து செயல்படுங்கள். சமூக சிந்தனை உங்களை மட்டும் உங்களை சார்ந்திருப்பவர்களையும் பாதுகாக்கும்.