

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம்(ஐடி) மற்றும் ஐடி இல்லாத நிறுவனங்கள் என்று பிரிக்கப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்பெரிஸ் ஐடி மேன்பவர் என்ற அமைப்பு இந்திய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்தியா முழுவதும் 509 (ஐ.டி மற்றும்ஐ.டி அல்லாத) நிறுவனங்களிடம், தங்களுக்கு தேவையான வேலையாட்கள் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து, எக்ஸ்பெரிஸ் ஐடி மேன்பவர் நிறுவனத்தின் தலைவர் மன்மீத் சிங் கூறுகையில், “தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை வேலைக்கு எடுக்கவேண்டும் என்றால் தொழில்நுட்ப திறன் மட்டும் இருந்தால் போதும் என்று நிர்வாகம் முன்பு நினைத்தது. ஆனால், தற்போதோ தொழில்நுட்ப திறனை தாண்டி, ஒத்துழைப்பு, விமர்சன சிந்தனை மற்றும் தலைமைத்துவ திறன் போன்ற அனைத்தையும் ஒரே நபரிடம் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இந்த திறமைகள் இருக்கும் நபர்கள்தான் வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்றார்.
எக்ஸ்பெரிஸ் ஐடியின் அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்பு சந்தை படிப்படியாக வளர்ந்து வரும்நிலையில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதிகமாகிறது.
இதனால், வேலைவாய்ப்பு சூழலும், வேலையிழப்பு சூழலும் சமமாகிறது. செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா தொழில்நுட்பத்தினால் சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்பு கிடைக்கும் அதே நேரத்தில் 2021-ம் ஆண்டில் ஐடி நிறுவனங்களில் திறமை பற்றாக்குறை மிக பெரிய அளவில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐந்து வருட அனுபவம் உள்ள வேலைக்கு பெரும்பாலும் புதியவர்களை அமர்த் தவே விரும்புகின்றன.
இந்திய ஐடி நிறுவனங்களில் மொத்தவேலைவாய்ப்பு 6 மாதங்களுக்கு முன்பாக 53.41% இருந்தது. ஆனால், தற்போது 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும், மார்ச் 2020-க்கு இடையில் வேலைவாய்ப்பு 47.54% குறையும்.