

மைசூரு
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து வேளாண் விஞ்ஞானி அய்யப்பன் யோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, மைசூருவில் சிறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் அய்யப்பன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ''உலகம் முழுவதும் ஓராண்டுக்கு சுமார் 130 கோடி டன் உணவு வீணாகிறது. இது மனிதர்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் உணவு கலோரிகளின் அளவில் 24 சதவீதம் ஆகும். உணவு சேமிக்கப்படும்போது மட்டும் 52 கோடி டன் அளவுக்கு வீணாகிறது. உணவைக் கையாளும்போதும் பதப்படுத்தும்போதும் 78 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதிய கண்டுபிடிப்புகள், ஊக்கத்தொகைகள், முதலீடுகள் ஆகியவை விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து பேச்சு எழுகிறது. இதற்கு, முதலீட்டுச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். தயாரிக்கும் பொருட்களின் மதிப்பு கூட்டப்பட வேண்டும்.
விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவும் அவற்றை நல்ல முறையில் சந்தைப்படுத்தவும் உணவு பதப்படுத்தலே முக்கியக் காரணியாக அமையும்.
2050-ம் ஆண்டில், 70 சதவீத மக்கள் தொகை, நகரங்களை நோக்கி நகர்ந்துவிடும். வேளாண் உற்பத்தி 70 சதவீதம் அதிகரிக்கும்'' என்று விஞ்ஞானி அய்யப்பன் தெரிவித்தார்.