Published : 22 Oct 2019 09:21 AM
Last Updated : 22 Oct 2019 09:21 AM

மோடி - ஜி ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித் தந்த மதுசூதன்; `தி இந்து' படித்ததால் அதிகாரியானார்: பெற்றோர் பெருமிதம்

ஆர்.கிருஷ்ணகுமார்

கோவை

அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்ட போது, இருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராய் சிறப்பாகச் செயல்பட்டு, இரு தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றவர் மதுசூதன் (34).

இவரது சகோதரியும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். "சிறு வயது முதலே `தி இந்து' நாளிதழ் படித்த எங்களது குழந்தைகள், உயர்ந்த பதவியை அடைந்துள்ளது பெருமை அளிக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர் மதுசூதனின் பெற்றோர். இவர்கள் தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகின்றனர்.

மதுசூதனின் தந்தை என்.ரவீந்திரன், காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய் நிர்மலதா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதுசூதனின் தங்கை பிரியதர்ஷினியும் ஐ.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.

கோவை லிசிக்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை பயின்ற மதுசூதன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்தார். 2006-ல் மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்த மதுசூதன், 2007-ல் ஐ.எஃப்.எஸ். (இந்திய அயல்பணி சேவை) அதிகாரியாகப் பொறுப்பேற்றார். முசௌரி, டெல்லியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், 2009-ல் சீன நாட்டின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலராகப் பொறுப்பேற்றார். பின்னர் இரண்டாம் நிலை, முதல்நிலைச் செயலராக பதவி உயர்வு பெற்றார்.

இவரது மனைவி டாக்டர் அன்னபூர்ணா, மகன் இஷான். குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

தற்போது டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அயல்பணி செயலர் அலுவலகத்தின் (எஃப்.எஸ்.ஓ.) துணைச் செயலராகப் பணிபுரிந்து வருகிறார். கோவையில் உள்ள மதுசூதனின் பெற்றோர் ரவீந்திரன், நிர்மலதாவை சந்தித்தோம்.
"சிறு வயது முதலே மதுசூதன் நன்றாகப் படிப்பார். இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் பொது அறிவு நூல்களை நிறைய படிப்பார். குறிப்பாக, வரலாறு சம்பந்தமான நூல்களை ஆர்வமுடன் விரும்பிப் படிப்பார். சிறு வயது முதலே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் கொண்ட மதுசூதன், மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஐ.எஃப்.எஸ்.-ஐ தேர்ந்தேடுத்தார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சீனாவின் மாண்டரின்மொழியில் மதுசூதன் தேர்ச்சி பெற்றவர். ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்றபிறகுதான் இந்தி கற்றுக்கொண்டார். அதேபோல, ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள், ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழி
யைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சீனா நாட்டில் அதிகம் பேரால் பேசப்படும் மாண்ட்ரின்
மொழியை கற்றுக்கொண்டார்.

பின்னர், மாண்ட்ரின் மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழியை அறிந்து விளக்கும் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றார். அப்படியே மொழிபெயர்ப்பதைக் காட்டிலும், பொருளையும், கருத்தையும் உணர்ந்து, பேசுபவரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மொழி பெயர்த்துப் பேசுவதுமுக்கியமாகும்.

மாண்டரின் மொழியில் வல்லவரான, எளிதாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு பேசக்கூடிய மதுசூதன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உஹான் நகரில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின்போதும், மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
ஏற்கெனவே, பிரதமர் உள்ளிட்டோருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில், குறிப்பாக மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்ட பின்னர்தான், மதுசூதன் குறித்து வெளியில் தெரிந்தது.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, சத்தியம் தவறாமை, விடாமுயற்சியைக் கற்றுத்தருவது அவசியம். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்த சொல்லித்தர வேண்டும். இந்து நாளிதழ் மற்றும் நல்ல புத்தகங்களை படிக்கச் செய்ய வேண்டும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து, கடினமாக உழைத்து, விடா
முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றிநிச்சயம். ஐ.எஃப்.எஸ். போன்ற படிப்புகள் குறித்து தமிழக மாணவ,மாணவிகளிடம் அதிக விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு மதுசூதன் பெற்றோர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x