

புதுடெல்லி
‘சைனிக் பள்ளி எனப்படும் ராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராணுவப் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளையும் சேர்க்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்துள்ளார். பாலினச் சமத்துவத்தை ஊக்குவிக்கவும் ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்தவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி தொடங்கிவைத்த பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டத்தை இது வலிமையாக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1961-ம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன், நாடு முழுவதிலும் சைனிக் ஸ்கூல் என்றழைக்கப்படும் ராணுவப் பள்ளிகளைத் தொடங்கினார். இப்பள்ளிகள் மாணவர்கள் இடையே சிறந்த திறனை வளர்த்து, அவர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையில் கல்வியை அளித்து வருகின்றன.