

லக்னோ
உத்தரப் பிரதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செல்போனுக்குத் தடையில்லை என்று மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சில செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் தினேஷ் சர்மா, செல்போனுக்குத் தடை விதித்து உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார். உயர் கல்வித்துறை இயக்குநர் வந்தனா சர்மாவும் தடை தொடர்பான செய்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து மறுப்பு தெரிவித்து ஓர் அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
உத்தரப் பிரதேச உயர்கல்வி இயக்குனரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ''கல்லூரி நேரங்களில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் நேரத்தை செல்போன்களில் செலவிடுவது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கற்பித்தல் சூழலை உறுதி செய்வதற்காக செல்போனுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் இனி செல்போன்களை எடுக்கவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தடை மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இத்தகவலை அரசு தற்போது மறுத்துள்ளது.
என்ன காரணம்?
இதுகுறித்து வெளியான தகவலின்படி, அடுத்த வாரத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, அதிரடியாக முடிவுகளை அறிவித்துவிட்டுப் பின்வாங்குவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஊர்க்காவலர் படையில் உள்ள 25,000 பேரை பொருளாதாரக் காரணங்களுக்காக வேலையில் இருந்து அரசு நீக்கியது. அவர்களின் எதிர்ப்பை அடுத்து, அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.
உ.பி.யின் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதியன்று இடைத் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்