

நியூயார்க்
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சனின் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நிறுவனம் தனது 33 ஆயிரம் பாட்டில்களை திரும்பப் பெறுகிறது.
அமெரிக்காவில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பேபி பவுடர் பாட்டிலில் இருந்து மாதிரி சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளில், பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருந்ததை அமெரிக்க சுகாதாரக் கட்டுப்பாட்டாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து நியூயார்க் பங்குச்சந்தையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பங்குகள் மளமளவெனச் சரிந்தன. சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக உள்ள பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாகச் செய்தி வெளியானதும், அதற்காக 33 ஆயிரம் பவுடர் பாட்டில்களை அந்நிறுவனம் திரும்பப் பெறுவதும் இதுவே முதல் முறை ஆகும்.
ஏற்கெனவே ஜான்சன் பேபி பவுடர் உள்ளிட்ட டால்கம் பவுடர்கள் தங்களுக்குக் கேன்சரை ஏற்படுத்தியதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது 15 ஆயிரத்துக்கும் மேலான நுகர்வோர்கள் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜான்சன் நிறுவனத்தின் பெண்கள் நலனுக்கான தலைவர் சூசன் நிக்கல்சன், ''பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கண்டுபிடிக்கப்பட்டது விசித்திரமான ஒன்று, எங்களுடைய சோதனையில் இது இல்லை'' என்றார்.