

கோவை
‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா கோவையில் நாளை (அக்.20) நடைபெறுகிறது.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (VIT) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சி னையை அடையாளம் கண்டு, அதற் கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து, தீர்வுகளையும் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். பல்வேறு அறிவியல் வழிமுறை களைப் பயன்படுத்தி, தயாரித்துள்ள அறிவியல் ஆய்வுக் கட்டுரையை கோவை சிங்காநல்லூர்-உப்பிலி பாளையம் சாலையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளி வளாகத்தில் நாளை நடைபெறும் கோவை மண்டல அறிவியல் திருவிழாவில் சமர்ப்பிக்கின்றனர்.
அப்போது மக்களுக்குப் பயன்படும் வகையில் தாங்கள் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுப் பணி குறித்து, அறிவியல் அறிஞர்கள் மத்தியில் மாணவர்கள் உரையாற்றுகின்றனர். அறிவியல் திருவிழாவில் கலந்து கொள்ளும் இளம் விஞ்ஞானிகளைப் பாராட்டி குமரகுரு தொழிலக ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு மைய இயக்குநர் சி.வசந்தராஜ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலர் எஸ்.சுப்பிரமணி மற்றும் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உரையாற்று கின்றனர். மண்டல அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் குழுக்கள், நவம்பர் மாதம் வேலூரில் உள்ள விஐடி பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் திருவிழாவில் பங்கேற்கலாம்.
கோவை மண்டல அறிவியல் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே பதிவு செய்த கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம மூர்த்தியை 97860 73353 என்ற செல்போன் எண்ணிலும், `இந்து தமிழ் திசை' விநியோகப் பிரிவு மேலாளர் விஜயகுமாரை 98942 20609 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.