Published : 18 Oct 2019 12:03 PM
Last Updated : 18 Oct 2019 12:03 PM

புல்வாமா வீரர்களின் மகன்களுக்கு சிறப்புப் பயிற்சி: பாராட்டு மழையில் சேவாக்

புல்வாமா வீரர்களின் மகன்களுக்கு, கிரிக்கெட்டில் சிறப்புப் பயிற்சி அளித்து வரும் சேவாக்குக்கு, நெட்டிசன்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். சுமார் 2,500 வீரர்கள் சென்ற கான்வாயில் இருந்து 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீர மரணமடைந்த வீரர்களின் குழந்தைகளுக்குத் தேவைப்படும் படிப்புச் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர்களின் குழந்தைகளுக்கு சேவாக் இண்டர்நேஷனல் பள்ளியில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கதாநாயகர்களின் குழந்தைகள்! இவர்கள் இருவரும் சேவாக் பள்ளியில் படிப்பது குறித்துப் பெருமிதம் கொள்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் பங்களிப்பதில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

பேட்ஸ்மேன் - அர்பித் சிங், த/பெ. புல்வாமா ஷஹீத் ராம் வகீல்
பந்து வீச்சாளர் - ராகுல் சோரங், த/பெ. புல்வாமா ஷஹீத் விஜய் சோரங்'' என்று பதிவிட்டுள்ளார்.

இரு குழந்தைகளும் கிரிக்கெட்டில் பயிற்சி பெறுவது குறித்த சேவாக்கின் பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒரு பதிவர், ''ஆன் ஃபீல்டாக இருந்தாலும் ஆஃப் ஃபீல்டாக இருந்தாலும் நீங்கள் உண்மையாக உத்வேகம் அளிப்பவர்'' என்று தெரிவித்துள்ளார். மற்றொரு நெட்டிசன் தனது பதிவில், ''உங்களுக்கு ஒரே ஒரு வார்த்தை - மரியாதை!'' என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பயனர் கூறும்போது, ''கிரேட் சேவாக், நமக்காக அவர்கள் தங்களின் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர். அவர்களின் குடும்பத்தோடு நாம் நிற்க வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x