

புதுடெல்லி
பேஸ்புக் நிறுவனம் ‘கோயிங் ஆன்லைன் ஏஸ் லீடர்ஸ் (கோல்)’ என்ற புதிய திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், பேஸ்புக் ‘கோல்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கடந்த புதன்கிழமை டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த 5,000 பெண்களை, தங்கள் கிராம அளவில், டிஜிட்டல் இளம் ஆளுமையாளராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோல் திட்டத்தின்கீழ், பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த இளம் பெண்கள் டிஜிட்டல் மற்றும் வாழ்க்கைத் திறன்களைக் கற்கவும், வணிகம், பேஷன் மற்றும் கலைத் துறைகளில் தங்களின் திறனை வளர்க்கவும் அந்த துறை நிபுணர்களுடன் இணைந்து செயல்படவும் முடியும். பேஸ்புக் மூலம் பெண்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறையில், தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், “கோல் திட்டத்தின் கீழ் ஒரு கூட்டமைப்பு ஏற்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நசுக்கப்பட்ட இளம்பெண்கள் வெற்றிபெற தேவையான கருவிகள் மற்றும் வழிகாட்டு
தல்களை கோல் வழங்கும். அவர்கள் அறிய முடியாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்களை மேம்படுத்த முடியும்” என்றார்.
கோல் திட்டமானது, டிஜிட்டல் மூலம் கல்வியறிவு, தொழில்முனைவோர் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு போன்ற பல திறன்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வாட்ஸ்ஆப், மெசஞ்சர் போன்றவற்றை பயன்படுத்தி, 2 லட்ச
மணி நேரத் திற்கும் மேலான வழிகாட்டுதல் வழி முறைகள் வழங்கப்படும்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய பழங்குடியினர் நலத் துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் 125 இளம்பெண்கள் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் கூறுகையில், “இந்தியாவில் 35 சதவீத பெண்கள் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இணையதளத்தின் பலத்தை பெண்களுக்கு உணர்த்தி வருகிறோம்” என்றார்.
இந்த திட்டத்தின் நோக்கமே,பெண்களின் முன்னேற்றம்தான். அவர்களை ஒரு நல்ல ஆளுமையாக உருவாக்கவே முயற்சி செய்து வருவதாக, பேஸ்புக் இந்தியாவின் திட்ட இயக்குநர் அங்கிதாஸ் கூறினார்.