Published : 17 Oct 2019 11:18 AM
Last Updated : 17 Oct 2019 11:18 AM

உயிர்த்தெழுந்த அழகுநகர் அரசுப் பள்ளி: சாதித்துக் காட்டிய தலைமை ஆசிரியை விஜயலட்சுமி

கி.பார்த்திபன்

தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மத்தியில், நாமக்கல் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், குழந்தைகளை பெற்றோர் ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு 2 மாணவர்களை மட்டுமே கொண்டு, ‘மூடு விழா’ காணும் நிலையில் இருந்த இப்பள்ளி, தற்போது 73 மாணவர்களைக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறது.

எப்படி இது சாத்தியம் என அப்பகுதி மக்களை அணுகிய போது, அனைவரும் சுட்டிக்காட்டிய நபர் பள்ளித் தலைமை ஆசிரியை வி.விஜயலட்சுமி. இவரும், கணவர் தங்கராஜும் வீடு, வீடாக ஏறி, இறங்கி இதை சாத்தியப்படுத்தியதாக அழகு நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிய பள்ளிக்கு சென்றபோது, இன்முகத்துடன் வரவேற்ற வி.விஜயலட்சுமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
நாமக்கல் அருகே கீரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தேன். 2018-ம் ஆண்டு அழகு நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு (ஆங்கில வழி) இடமாற்றம் செய்யப்பட்டேன். பள்ளிக்கு வந்தபோது 3-ம் வகுப்பில் ஒரு மாணவர், 4-ம் வகுப்பில் ஒரு மாணவி மட்டுமே படித்து வந்தனர். வகுப்பறை கட்டிடமும் மோசமான நிலையில் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமெனில், முதலில் பள்ளி வகுப்பறை கட்டிடம் புதுப்பிப்பதுடன், வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். எனக்கு அறிமுகமான நபர்கள், தன்னார்வ அமைப்பு களின் உதவியுடன் பள்ளி வகுப்பறை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.

மேலும், பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டதுடன், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நானும், கணவரும் விடுமுறை நாட்களில் அழகு நகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்க்கும்படி வலியுறுத்தினோம். இதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தது எனது கற்பித்தல் முறைதான்.

கீரம்பூர் பள்ளியில் பணிபுரிந்தபோது மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பிக்கும் முறையை வீடியோவாக பதிவுசெய்ததை குழந்தைகளின் பெற்றோரிடம் காண்பித்தேன். அதன் பலனாக, 67 மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஒப்புக்கொண்டனர். எனினும், 49 மணவர்கள் மட்டுமே பள்ளியில் சேர்ந்தனர். அதிலும், 25 மாணவர்கள் மட்டுமே நீடித்தனர். மனம் தளராமல், மேற்கண்ட மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பித்தேன். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கண்ட பெற்றோர், இதுகுறித்து தங்களது சக நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால், இந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை 73 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். வரும் காலத்தில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

எளிய முறையில் கற்பித்தல்

எழுத்துகளை அப்படியே சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு பதியாது. சில எளிய வரைபடங்கள் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதேபோல், ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதை தமிழ் எழுத்துகள் மூலமாக கரும்பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கினால் சரியான உச்சரிப்பில் படிப்பர். ஆங்கில வார்த்தைகளை தமிழில் அறிவதற்கு 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில அகராதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் முறையும் மாணவர் களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்களே ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் அர்த்தம் கண்டுபிடிப்பர். வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதால், கூடுதல் வகுப்பறைகள் அவசியம்தேவை. நன்கொடையாளர்கள் மூலமாக, புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகள் பெருகியுள்ள இக்கால கட்டத்தில், அரசுப் பள்ளியை நோக்கி மாணவர் களை இழுத்த பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமியின் முயற்சி பாராட்டத்தக்கது என்றால், அது மிகையாகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x